அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மத்திய கண்காணிப்பு ஆணையமும் இதில் முறை கேடு நடைபெற்றதாக தெரிவித்தது. சினிமா டிக்கெட் விற்பனை போல 2ஜி ஒதுக்கீடு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஆனால் கருணாநிதி இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத்தலைவரின் அறிக்கை அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், ராசாவின் நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் கைபேசியில் பேசுகின்ற சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது என்று கருத்து தெரிவித்தார். இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றக்கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தினார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கிய டெனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது. இந்த ஊழலை பொது மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் மனிதச்சங்கிலி பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் வைகைச் செல்வன் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளவழகன், அ.தி.மு.க. மாநி லங்கள் அவை குழுச்செயலாளர் இளவரசன், வரகூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சந்திரகாசி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply