14 நாள் சி.பி.ஐ., விசாரணை முடிந்து சிறையில் ராஜா: வீட்டு சாப்பாட்டிற்கு கோர்ட் அனுமதி

posted in: அரசியல் | 0

தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும் அனுமதி வழங்கினார்.

“ஸ்பெக்ட்ரம்’ ஊழல்விவகாரத்தில், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தார். கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் முதலில் ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்தனர். அதன் பின், மேலும் நான்கு நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக இரண்டு நாட்களும், நான்காவது முறையாக மூன்று நாட்களும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் 14 நாட்களாக அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., காவல்முடிவடைந்ததை அடுத்து, நேற்று ராஜாவை பாட்டியாலா கோர்ட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் கொண்டு வந்தனர். மதியம் 2 மணியளவில், நீதிபதி சைனி முன் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சி.பி.ஐ., வக்கீல் அகிலேஷ் வாதிட்டதாவது: “ஸ்பெக்ட்ரம்’ ஊழல்தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவையும், பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இவர்களை சி.பி.ஐ., காவலில் எடுக்க காரணம், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து இரண்டு பேரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து, உண்மைகளை தெரிந்து கொள்ளவே. ஆனால், இவ்விஷயத்தில், பண பரிவர்த்தனைகள் நடந்தது உட்பட முறைகேடுகள் குறித்த எந்த கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க மறுக்கின்றனர். மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கருதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இவர்களை சி.பி.ஐ., கண்காணித்து வருகிறது.

ராஜாவை வெளியில் விட்டால், அவர் ஆதாரங்களை அழிப்பதோடு, வழக்கு விசாரணைக்கும் இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது தவிர, ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தும் விசாரணையும் இன்னும் முடியவில்லை; எனவே, இவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க வேண்டும், என வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவை வரும் 3ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில்வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜாவை திகார் சிறைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. அப்போது, ராஜா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜாவுக்கு, “அல்சர்’ நோய் இருப்பதால், வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும், ஏற்கனவே வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ளவும் சிறையில் அனுமதிக்க வேண்டும்.மேலும், புத்தகங்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடியையும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சைனி, “1894ம் ஆண்டுக்கான சிறைச் சட்டம் பிரிவு 31ன் கீழான விதிகள்படி, ராஜாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருவது குறித்து, சிறை கண்காணிப்பாளரை அணுக வேண்டும். சிறை விதிமுறைகளின்படி, அவர் ராஜாவின் மனுவை பரிசீலிப்பார்’ என, உத்தரவிட்டார். பின்னர், ராஜா தரப்பில் ஒவ்வொருமுறையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதை தவிர்க்கும் வகையில் சிறையில் இருந்த படியே, “டெலிகான்பரன்சிங்’ மூலம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு, நீதிபதி சைனி கூறுகையில், சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை யெனில், இதுகுறித்து கோர்ட்டிற்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார். ராஜா தரப்பில், நேற்று ஜாமீன் வழங்கும்படி கோரிக்கை வைப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால், டில்லி அருகே உள்ள திகார் சிறையில் நேற்று மாலை ராஜா அடைக்கப்பட்டார்.

ஆயுள் கைதி அறையில் ராஜா: திகார் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அங்கு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.ரத்தி அடைக்கப்பட்டுள்ள அறையில் அடைக்கப்பட்டார். மாலை 6 மணி அளவில் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா, அங்கு ஜெயில் எண்.1க்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் தனது அறையில் நுழைந்தது முதல், ராஜா யாரிடமும் பேசவில்லை. உள்ளே சென்றது முதல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். ராஜா அடைக்கப்பட்ட அறையில்தான், ஆயுள் தண்டனை கைதியான டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் ரத்தி அடைக்கப்பட்டுள்ளார். இவர், டில்லியில் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி இரண்டு வர்த்தகர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி, கீழ்கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *