4வது முறை மதிமுக பொதுச் செயலரானார் வைகோ!

posted in: அரசியல் | 0

சென்னை: ம.தி.மு.க.வின் பொதுச் செயலராக நான்காவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் வைகோ.

ம.தி.மு.கவின் நான்காவது அமைப்பு தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் நேற்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.

இதில் பொதுச் செயலர் பதவிக்கு வைகோ போட்டியிட வேண்டும் என, 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழிந்தனர்; 15 மாவட்டச் செயலர்கள் வழிமொழிந்தனர். அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், மீண்டும் பொதுச் செயலராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்காவது முறையாக அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக துரைசாமி, பொருளாளராக மாசிலாமணி, துணைப் பொதுச் செயலர்களாக மல்லை சத்யா, நாசரேத்துரை, துரை பாலகிருஷ்ணன், ஆட்சிமன்ற குழு செயலராக கணேசமூர்த்தி எம்.பி., அரசியல் ஆலோசனை குழு செயலராக மலர்மன்னன், அரசியல் ஆய்வு மைய செயலராக செந்தில் அதிபன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட்டனர்.

பின்னர் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசுகையில், “சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிற நமக்கு மறுமலர்ச்சி கிடைக்கவுள்ளது. ஆனால் மறுமலர்ச்சி என்பது அத்தனை எளிதில் கிடைக்காது. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும். உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்ய வேண்டும். அப்படி தியாகம் செய்து வளர்ந்த கட்சி மதிமுக.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். ம.தி.மு.க.,விற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. அரசியல் களத்தில் ம.தி.மு.க.,வின் ஆட்டம் துவங்கி விட்டது…”, என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *