60 மாணவர்களுடன் ஜூனில் செயல்படும் திருச்சி-ஐ.ஐ.எம்.

posted in: கல்வி | 0

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 11 வது ஐ.ஐ.எம்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) வரும் ஜூன் முதல் செயல்படத் தொடங்குகிறது.

இதுகுறித்து கூறிய திருச்சி ஐ.ஐ.எம். வட்டாரங்கள், “புதிய ஐ.ஐ.எம் -இல் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 12 வகையான பதவிகளுக்கு முழுநேர ஆசிரியர்களாக பணியாற்ற 365 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் சில விண்ணப்பங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், யு.ஏ.இ. மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ளன. ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து நிபுணர்களைக் கொண்ட சிறப்பு குழுக்களை ஐ.ஐ.எம். கவர்னர்கள் வாரியம் அமைத்துள்ளது.

ஆரம்பத்தில் 60 மாணவர்களை மட்டுமே எடுத்துக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் மற்றும் பாடங்களின் உள்ளடக்கம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கல்வி கட்டண விவரங்கள் இந்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் வெளியிடப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் தேவைகளை கருத்தில்கொண்டு, குறுகியகால படிப்புகளை ஆரம்பிக்க திருச்சி-ஐ.ஐ.எம். திட்டமிட்டுள்ளது மற்றும் தங்களின் பிரதிநிதிகளை ஐ.ஐ.எம்-திருச்சிக்கு அனுப்ப விரும்பும் தொழிற்சாலைகளுக்காக தனி பாடத்திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. 15 பன்னாட்டு நிறுவனங்களும், பல பெரிய தொழில் நிறுவனங்களும் ஐ.ஐ.எம்-திருச்சியுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த முன்வந்துள்ளன.

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 174 ஏக்கர் நிலப்பரப்பில், மத்திய பொதுப்பணித் துறையால் புதிய ஐ.ஐ.எம். வளாகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3 வருடங்களில் அந்த பணிகள் முடிந்துவிடும். அதுவரை திருச்சி-என்.ஐ.டி. வளாகத்திலேயே ஐ.ஐ.எம். தற்காலிகமாக செயல்படும்” என்று தெரிவித்தன.

மேலாண்மை படிப்பிற்கு இந்திய அளவில் முதன்மை கல்வி நிறுவனங்களாக திகழும் ஐ.ஐ.எம் -கள் உலகளவிலும் அதிக புகழ் பெற்றுள்ளன. ஐ.ஐ.எம். மாணவர்கள் உலக தொழில்துறையில் கோலோச்சுகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.ஐ.எம் -களை சேர்த்து மொத்தம் 13 ஐ.ஐ.எம் -கள் தற்போது இந்தியாவில் உள்ளன.

நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களாக மதிப்பிடப்படுபவை ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு ஐ.ஐ.டி.(சென்னை) மட்டுமே இருந்து வந்தது. தமிழ்நாட்டை விட பின்தங்கிய மாநிலங்கள் சிலவற்றில் ஐ.ஐ.எம் -கள் இயங்கிவந்த நிலையில், தமிழகத்தில் நெடுங்காலம் ஐ.ஐ.எம். இல்லை.

ஆனால் தற்போது அந்த பெரும் குறையை போக்கும் வகையில், தமிழ்நாட்டின் இதயப்பகுதியில் அமைந்த திருச்சி மாநகரில் தற்போது ஒரு ஐ.ஐ.எம். அமைக்கப்பட்டுள்ளதானது, தமிழ்கூறும் நல்லுலகின் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *