மதுரை : கொடைக்கானல் அருகே கானல்காட்டில் 62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள், மரங்களை வெட்ட அனுமதி கோரி, 1993 முதல் நிலுவையிலுள்ள மனு மீது எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கொடைக்கானல் காமனூரை சேர்ந்த ஜோதி, ராஜேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு: எங்களுக்கு சொந்தமாக காமனூரில் 2.3 எக்டேர் நிலத்தில் ரெபஸ்டா, அராபிகா காபி தோட்டங்கள் உள்ளன. காபி செடிகள் 62 ஆண்டுகளானதால், முதிர்ந்து விட்டன. அவற்றை வெட்டி அப்புறப்படுத்தி, புதிய செடிகளை நட வேண்டும். காபிசெடிகள் மத்தியில் 700 நிழல் தரும் மரங்கள் உள்ளன. காபி செடிகளை வெட்ட, காபி போர்டிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. ஏற்கனவே 100 மரங்கள் காற்றில் விழுந்து கிடக்கின்றன. பாதுகாக்கப்பட்ட மரங்கள் பட்டியலில் இல்லாத மரங்கள், காபி செடிகளை வெட்டி அப்புறப்படுத்தவும், கொண்டு செல்லவும் அனுமதி வழங்க கலெக்டர், மாவட்ட வன அதிகாரி மறுத்து விட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.ஆர்.வெங்கடேசன் ஆஜரானார். அரசு வக்கீல் சசிக்குமார், “”மனுதாரர்களின் நில எல்லைகளை வரையறுக்காமல், மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது,” என்றார். நீதிபதி உத்தரவில், “”நில எல்லைகளை வரையறுக்க, மனுதாரர்கள் வருவாய்த் துறையினரிடம் மனு செய்ய வேண்டும். அதை வருவாய் துறையினர் உதவியுடன் கலெக்டர் வரையறை செய்ய வேண்டும். வழக்கு 1993ல் இருந்து நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால், கலெக்டர், மாவட்ட மலை பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து எல்லையை வரையறை செய்ய வேண்டும். பின், விருப்பு, வெறுப்பின்றி மனுதாரர் கோரிக்கை குறித்து எட்டு வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.
Leave a Reply