கல்வித் துறையில், 8,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, ஊசலாட்டத்தில் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்தும், தேர்வுப் பட்டியலை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனம் காத்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறையில், 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க கல்வித்துறையில், 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலைப் பெற்று, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளையும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. எனினும், இது வரை தேர்வுப் பட்டியலை வாரியம் வெளியிடவில்லை.
சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், நியமனப் பணிகளுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் பீதியில் உள்ளனர். தேர்வுப் பட்டியலை வெளியிடக்கோரி, பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். எனினும், தேர்வு வாரியம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதே நேரத்தில், அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வை மும்முரமாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அப்படியே கிடப்பில் இருக்கும்போது, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்வதில் மட்டும், அரசும், தேர்வு வாரியமும் ஆர்வம் காட்டுவது ஏன் என, பட்டதாரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காரணம் என்ன?
பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட, இரண்டு விதமான தடைகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* ஒன்று, அருந்ததியர் பிரிவினருக்கான பதிவு மூப்பு பட்டியல் கடைசி நேரத்தில் பெறப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
* இரண்டாவதாக, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம் முன்னுரிமை அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தெளிவான வழிமுறைகளை தமிழக அரசு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
* பிளஸ் 2 வரையிலான பள்ளிக் கல்வியை மட்டும் தமிழ் வழியில் பெற்றிருந்தால் போதுமா அல்லது இளங்கலை பட்டப் படிப்பையும் முழுக்க முழுக்க தமிழ் வழியில் படித்திருக்க வேண்டுமா, கம்ப்யூட்டர் பாடப் பிரிவையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டுமா என்பதைப் போன்று பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பத்தில் இருக்கிறது.
இது போன்ற கேள்விகளுக்கு, அரசுத் தரப்பில் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த குழப்பங்கள் காரணமாகவே, தேர்வுப் பட்டியலை வெளியிட முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.
கல்வித்துறை கூறுவது என்ன?
பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறும்போது,”இரு பிரிவினருக்காக, ஒட்டுமொத்த தேர்வுப் பட்டியலையும் வெளியிடாமல் இருப்பது சரியல்ல. அருந்ததியருக்கான, 3 சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் ஆகியவற்றை,”ரிசர்வ்’ செய்துவிட்டு, மற்ற பிரிவினர்களுக்கான தேர்வுப் பட்டியலையாவது வெளியிடலாம்’ என்று கூறுகின்றனர்.
Leave a Reply