Font Size அதிகரிக்கும் மாணவர்களின் ஐ.ஐ.டி., மோகம்

posted in: கல்வி | 0

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இதற்கு காரணம் ஐ.ஐ.டி.,யின் கல்வித்தரம், வேலைவாய்ப்பு ஆகியவை மற்ற கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் உயர்ந்த நிலையில் உள்ளது. பிளஸ் 2 முடித்தவுடன் பெரும் பாலான மாணவர்கள், உயர் கல்வியை (இன்ஜினியரிங்) ஐ.ஐ.டி.,யில் தான் படிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

ஐ.ஐ.டி.,களில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும் உள்ளனர். ஐ.ஐ.டி.,யில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2 முடித்தவுடன் ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக இதில் வெற்றி பெறும் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.

தற்போது நாட்டில் மும்பை, டில்லி, சென்னை உட்பட மொத்தம் 15 ஐ.ஐ.டி.,கள் உள்ளன. இதைத் தவிர்த்து இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்களும் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குகிறது.

கடுமையான “யுத்தம்’ மொத்தம் 17 கல்வி நிறுவனங்களில் 9,509 இடங்கள் உள்ளன. இதற்கு இந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரம் பேர். சென்ற ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மும்பை மண்டலத்திலிருந்து 85,169 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தாண்டுக்கான ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு ஏப்ரல் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நுழைவுத்தேர்வில் பங்கேற்க வேண்டுமானால் தனியாக சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். இதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் இதில் கலந்து கொள்வதில்லை.

மேலும் மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கு மாநில அரசு நுழைவுத்தேர்வு நடத்தாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கிறது. ஆந்திரா ஆதிக்கம் இதனால் மாணவர்கள் நுழைவுத்தேர்வு பற்றி சிந்திப்பதில்லை அதற்கு தயாராவதும் இல்லை.

குறைந்தளவிலான தமிழக மாணவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி., யில சேர்கின்றனர். ஆனால் நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகளவிலான மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். சென்ற ஆண்டு ஜே.இ.இ., தேர்வில் முதல் பத்து இடங்களில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இதனால் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் ஐ.ஐ.டி., யில் சேர்கின்றனர். தமிழக மாணவர்களும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வில் அதிகளவில் பங்கேற்பதற்கு வசதியாக அரசு மற்றும் பள்ளிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *