மும்பை: அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச் 1பி மற்றும் எல்1 விசாக்கள் பெறுவதில், இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு சிக்கல்கள் நீடிப்பதால் வருவாய் இழப்பு மற்றும் இரட்டிப்பு செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உலகளவில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின், விசா வழங்குவதில் அமெரிக்கா சில கடுமையான நெறிமுறைகளை பின்பற்றுவதாக ஐ.டி., நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. விசா கட்டணம் அதிகரிப்பு, நடைமுறை சிக்கல்கள், அச்சுறுத்தும் சட்டங்கள் ஆகிய காரணங்களால், இந்திய ஐ.டி., நிறுவனங்கள் எளிதில் எச் 1பி மற்றும் எல்1 விசாக்கள் பெற முடியாமல் உள்ளன. விசா சிக்கல்களால், கடந்தாண்டின் இறுதி மூன்று காலாண்டிலும், 1 சதவீத வளர்ச்சி தடைபட்டு வந்திருப்பதாக இந்திய ஐ.டி., நிறுவன தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பெரிய நிறுவனங்களுக்கு, கடந்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் விசா நிராகரிப்பு 4 முதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறு நிறுவனங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளது.
“விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிகளவில் நிராகரிப்பது, நேர்முக தேர்வுக்கு நேரம் ஒதுக்கி தராதது, கூடுதல் சாட்சிகள் கேட்பது, நேர்முக தேர்வில் முரண்பாடு போன்ற சிக்கல்கள் கடந்த சில மாதங்களாக தொடர்வதாக விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த வாய்ப்பை, விசா சட்ட சிக்கல்கள் பறித்து விடுமோ என்று அச்சம் எழுந்துள்ளது. விசா பெற ஒரே தகுதியுடன் விண்ணப்பித்தவர்களிடம் வெவ்வேறு எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் வைக்கின்றனர். கூடுதல் ஆவணங்கள் கேட்கின்றனர். பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், இச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து பல்வேறு தூதரகங்களை அணுகி வருகின்றன.
அமெரிக்க எல்லை பாதுகாப்பு மசோதாவில், ஒரு விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 90 ஆயிரம் ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு என்பது அமெரிக்கா கொடுத்துள்ள முதல் அடி. அடுத்ததாக இன்னும் கடுமையான விசா நெறிமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இதுகுறித்து அமெரிக்க சட்ட வல்லுனர்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சிக்கல்களால், இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வரி கொடுத்து, “கான்ட்ராக்ட்’களை இந்திய நிறுவனங்கள் பெற்று வரும் போது, அமெரிக்காவின் விசா சட்டம் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
Leave a Reply