அமெரிக்காவில் கல்வி, இந்தியாவில் வேலை

posted in: கல்வி | 0

அமெரிக்காவில் உயர் கல்வியை படிக்க விரும்பும் இளைய சமுதாயம், படிப்பு முடிந்ததும் இந்தியாவில் வேலை செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

8 சதவீத மாணவர்கள் மட்டுமே அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவிலேயே பணியாற்ற விரும்புகின்றனர். மற்ற அனைத்து மாணவர்களும் இந்தியாவிற்கு திரும்பவே திட்டமிட்டு வருகின்றனர்.

பென்சில்வேனியா ஸ்டேட் யூனிவர்சிட்டி, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் உள்ளிட்ட சில யூனிவர்சிட்டிகள் இணைந்து செய்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 74 சதவீத மாணவர்கள், அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பி, தங்கள் பணியை தேர்வு செய்யவே விரும்புகின்றனர்.

குறிப்பிட்ட சதவீத மாணவர்கள், அமெரிக்காவில் படிப்பு முடிந்ததும், சிறிது காலம் அங்கு பணியாற்றிவிட்டு, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை அனுபவ சான்றிதழுடன் இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்த செய்தி இந்திய பல்கலைக்கழகங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 1,00,000 இந்திய மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்கள் ஏன் இந்தியாவிற்குத் திரும்ப விரும்புகின்றனர் என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு சில மாணவர்கள், தங்களது குடும்பத்தையேக் காரணமாகக் கூறியுள்ளனர். மேலும் சில மாணவர்கள், எங்கள் தாய் நாட்டில் வாழவே ஆசைப்படுவதாகவும், சிலர், இந்திய கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தில் எங்கள் வழக்கப்படி வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், வருங்காலத்தில் வெளிநாட்டில் உயர் கல்வி படித்த இளைஞர்களுக்கு, கல்வி நிலையங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், இதனால் கல்வித் தரமும் உயரும், வெளிநாட்டுக் கல்விக்கு நிகராக நம் நாட்டிலும் கல்வியை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *