சட்டசபை தேர்தல் களத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கி, தொகுதிப் பங்கீட்டை முதலில் துவங்கியது அ.தி.மு.க., ஆனால், இழுபறியாய் இருந்த தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி கூட முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பதும் அதே அ.தி.மு.க., தான்.
கூட்டணியில் ஆரம்பம் முதல் நீடித்து வந்த ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்படாததால், தேக்க நிலையில் நிற்கிறது. இதற்கிடையே, நேர்காணலையும் அ.தி.மு.க., துவக்கிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று கட்சிகளும் தவிப்பில் உள்ளன.
ம.தி.மு.க., 25 தொகுதி கேட்கிறது, 21, 20 என்று வரிசையாய் தகவல்கள். அ.தி.மு.க., 11 தருகிறது, 15, 17 என மறுபுறம் தகவல்கள். “சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெற்று, புரட்சித் தலைவி தலைமையில் ஆட்சியமைக்கும்’ என்று மேடைதோறும் முழங்கி வந்த ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய பிரமுகர்கள் பலர் விலகிய நிலையிலும், வைகோவிற்காக எஞ்சியிருக்கும் மாவட்டச் செயலர்களும், முக்கிய பிரமுகர்களும் அ.தி.மு.க., ஏற்படுத்தியுள்ள நெருக்கடியால் நிலைகுலைந்து போயுள்ளனர்.”அ.தி.மு.க., தரப்பில் இருந்து சிக்னல் வந்ததா’ என, ம.தி.மு.க., கட்சி அலுவலகமான, “தாயகத்திற்கு’ வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறது ம.தி.மு.க., வட்டாரம்.”கடந்த காலங்களில் தி.மு.க., செய்தவாறே அ.தி.மு.க.,வும் செய்யப் பார்க்கிறது. நாம் தனித்து நிற்போம். நன்றி மறந்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’ என்ற குரல்கள், வேகமாய் எழத் துவங்கியுள்ளன. ஆனால், ம.தி.மு.க., தலைமையோ, “பொறுமையாய் இருங்கள்; நல்லதே நடக்கும்’ என அமைதிப்படுத்தி வருகிறது.
இதே குழப்பம் தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்த, “தோழர்’கள் மத்தியிலும் நிலவுகிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளில் யாருக்கு அதிக சீட் என்பதிலும், இருவரும் கேட்கும் தொகுதிகளில் உள்ள முரண்பாடுகளும் இதில் தனியாவர்த்தனம். அதோடு, அ.தி.மு.க., தங்களை, “கார்னர்’ செய்து, தொகுதிகளை ஒப்புக்கொள்ள வைக்க திட்டமிடுகிறது என்ற, அதிருப்தி உள்ளது.தி.மு.க.,வின் அதிரடிகளையும், பணபலத்தையும் சமாளித்து, விலை போகாமல் இருக்கக்கூடியவர்களாக ம.தி.மு.க.,வும், “காம்ரேட்’களும் இருப்பர் என்பதை அ.தி.மு.க., முன்னணி பிரமுகர்களே ஒப்புக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் இழுத்தடித்தது, அ.தி.மு.க.,விலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.”தே.மு.தி.க.,விற்கு தாராளமாய் தொகுதிகள் வாரி வழங்கப்பட்டன. கடைசியாய் வந்த சரத்குமாருக்கு கூட இரு தொகுதிகளை கொடுத்துவிட்டனர். ம.தி.மு.க.,வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொங்கலில் உள்ளன’ என்று தினந்தோறும் வெளியாகும் செய்திகள், வாக்காளர்கள் மத்தியில் அ.தி.மு.க., அணியின் பலத்தைக் குறைத்துள்ளது.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் தொடர்ந்து இழுத்து, தாங்கள் நினைக்கும் எண்ணிக்கைக்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைக்கலாம் என அ.தி.மு.க., நினைக்குமானால், அது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.எல்லாம் முடிந்து கூட்டணியில் சுமுக நிலை ஏற்பட்டாலும், இந்த கசப்பான நினைவுகள், தேர்தலில் உள்ளடி வேலைகளுக்கு வழிவகுத்துவிடும் என்ற கவலை, அ.தி.மு.க., அணியில் உருவாகியுள்ளது.
எத்தனை நாள் நீடிக்கும்? அ.தி.மு.க.,வுடனான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியை தொடர்ந்து, கடந்த 12ம்தேதி கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழுவின் முடிவில், 11 தொகுதிகளை தர அ.தி.மு.க., முன்வந்ததாகவும், தாங்கள் 18 தொகுதி கேட்பதாகவும் மார்க்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். நிர்வாகக் குழு இறுதி முடிவை வரும் 19ம்தேதி அறிவிக்குமென தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சியில் நிர்வாகக்குழு முடிவெடுக்க, மாநிலக் குழு அதிகாரம் கொடுத்துள்ளது. கவுரவமான தொகுதிகளுக்காக காத்திருக்கும் ம.தி.மு.க., வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. ஆனால், ம.தி.மு.க.,வின் மவுனம் எப்போது கலையும் என்று தெரியவில்லை.
Leave a Reply