அ.தி.மு.க., கூட்டணியில் ஒற்றுமையில்லை : தேர்தல் களத்தில் தி.மு.க., அணி சுறுசுறுப்பு

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபைக்கான தேர்தல் களத்தில், தி.மு.க., கூட்டணி சுறுசுறுப்புடன், “களப்பணி’ ஆற்றிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில் ஜெயலலிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும், ஆளுக்கொரு பாணி வகுத்து, செயல்பட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் பக்காவாக திட்டமிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன் என காங்கிரஸ் தவிர மற்ற கட்சி கூட்டணித் தலைவர்கள், “ரவுண்டு கட்டி’ பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரசிலோ இப்பொழுது தான் தேர்தல் பணிக்குழுவே நியமிக்கப் பட்டுள்ளது. தி.மு.க., போட்டியிடும் 119 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு ராஜ உபச்சாரம் நடந்து வருகிறது. கணக்கு வழக்கின்றி, பணம் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்கள் மட்டுமின்றி, தி.மு.க., தொண்டர்களும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கவனிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் எத்தனை வழக்குகள் வந்தாலும், அது ஒருபுறம் இருக்கட்டும் என ஒதுக்கிவிட்டு, தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.காங்கிரஸ் போட்டியிடும் ஒரு சில தொகுதிகளைத் தவிர, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வின், கொல்லை பக்கப் பிரசாரம் களை கட்டி வருகிறது.

அ.தி.மு.க., அணியில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. மக்கள் கூட்டம், பெரியளவில் வருகிறது. தலைவர்கள் இப்படி சூறாவளி சுற்றுப் பயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள், தங்கள் கட்சியினரைக் கூடக் கவனிப்பதில்லை; கூட்டணிக் கட்சியினரை கண்டுகொள்வதேயில்லை. தே.மு.தி.க., – கம்யூனிஸ்ட்கள் உட்பட, கூட்டணிக் கட்சியினருடன் அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒத்துப்போகாத நிலையே பல இடங்களில் நிலவுகிறது.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க., கூட்டணித் தலைவர்கள் பிரசாரமாக செய்யுமளவுக்கு, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் கூட்டணித் தலைவர்கள் இணைந்து ஒரு மேடையில் தோன்றி இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தி.மு.க., கூட்டணியில் எப்பாடு பட்டாவது சோனியாவை மட்டுமாவது தமிழகத்தில் பிரசாரத்துக்கு கூட்டி வர பெரும் முயற்சியை, தி.மு.க., தரப்பு எடுத்து வருகிறது. அதைச் சமாளிக்க, அ.தி.மு.க., தரப்பில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொதுக்கூட்டம் நடத்துவது அவசியமானது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது:தென்மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் பிரசாரத்துக்கு சென்ற தி.மு.க.,வினரிடம், அப்பகுதியில் சாலை வசதி இல்லை என்ற புகார் முன் வைக்கப்பட்டது. இக்குறை தென்மாவட்ட தி.மு.க., பிரமுகரிடம் கொண்டு செல்லப்பட்டவுடன், உடனே தி.மு.க., எம்.பி., ஒருவரை அழைத்து, இரவோடு இரவாக, புத்தம் புது சாலை போட்டுத் தரப்பட்டது. செலவை எம்.பி., ஏற்றுக் கொண்டார்.”ஓட்டுப் போடுங்கள்… பார்க்கலாம்…’ என்ற பேச்சுக்கே இடமின்றி, தி.மு.க., தரப்பு “வேலை’யை ஆரம்பித்துவிட்டது.ஆனால், எங்கள் கூட்டணியில் அத்தியாவசியச் செலவுக்களுக்கு கூட வேட்பாளர்கள் பையை அவிழ்க்க மறுக்கின்றனர். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பில், பெரும்பாலான வேட்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களை சுறுசுறுப்பாக்கி களத்தில் இறக்க கட்சித் தலைமை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.2009, லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., அணியினர் சரியாக களத்தில் நிர்வாகம் செய்யாததால் தான் சில இடங்களில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *