அ.தி.மு.க., கூட்டணி விரிசல் மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை: “”அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், மகிழ்ச்சியளிக்கிறது,” என, ராமதாஸ், திருமாவளவன் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

சென்னை தி.நகர் பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையில், சட்டசபை தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர், ஆலோசனை நடத்தினர். பின், இருவரும் கூட்டாக, நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.,வும், தேர்தல் களத்தில் ஒன்றாக இருக்க, கடந்த காலத்தில் முயற்சி எடுத்தோம். அப்போது, முடிவு எங்கள் கையில் இல்லை. தற்போது, சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், இருபது ஆண்டு கால கனவு நனவாகியிருக்கிறது. பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கூட்டணி, இப்போது அமைந்துள்ளது. இந்த கூட்டணியில், சமய, சமுதாய நல்லிணக்கம் பிரதிபலிக்கும். இந்த கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்.

கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறைகள், யுக்திகள் என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம். “ஸ்பெக்ட்ரம்’ பிரச்னையால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் வராது. தேர்தலில் தொங்கும் சட்டசபை வந்தாலும், அமைச்சரவையில், நாங்கள் இடம் பெற மாட்டோம். தி.மு.க., ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. சமூக, மொழி, இன உணர்வு தளங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். தமிழர் பாதுகாப்பு தளத்தில், மூன்று ஆண்டுகள் தீவிரமாக பணியாற்றி உள்ளோம். இந்த இரு இயக்கங்களும் இணைய முடியாது, இணையக் கூடாது என நினைத்தவர்களின் கனவு கோட்டை தகர்ந்து விட்டது. தேர்தலில் நாங்கள் இணைந்திருப்பதால், தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தும். எங்கள் கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராவார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *