திட்டக்குடி : “”தமிழகத்தில் ஆசிரியர்களின்
சம்பளம் குறைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்,” என அப்துல் மஜீத் கூறினார். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடையே கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் அப்துல் மஜீத் நிருபர்களிடம் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் ஆசிரியர்கள் விடுப்பு, பணியிடை பயிற்சி, ஆசிரியர் பயிற்சி(பி.எட்.,) இரு மாத விடுப்பு, தேர்தல் பணி என ஆசிரியர் பணியில் ஈடுபடாமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி, கேள்விக்குறியாகிறது. இதைத் தவிர்க்க, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்தால், மாணவர்களின் கல்வி நிலை கூடுதலாகும். இதற்கு 5,600 ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாநில அரசு செயல்பட வேண்டும். உயர் கல்வித் துறையில் சாதனை படைத்ததாகக் கூறிய முதல்வர் கருணாநிதி, தொடக்கப்பள்ளிகளின் செயல்பாடுகளையும் விவரிக்க வேண்டும். 99 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் என்ற விதி மாற்றப்பட்டு, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதியை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு அதை அரசாணையாக மாற்றவில்லை. அரசின் இந்த நடைமுறைகளால் அரசு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க, பல லட்சம் லஞ்சமாகக் கொடுத்து ஏமாறும் நிலை உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்த சம்பள உயர்வு தொகையை விட குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது. இது வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அப்துல் மஜீத் கூறினார்.
Leave a Reply