ஆசிரியர்கள் டியூசன் எடுப்பதற்கு தடை

posted in: கல்வி | 0

பள்ளியில் முறையாக கற்பிக்காமல் டியூசன் எடுக்க நினைக்கும் ஆசிரியர்களின் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நிறுவனங்களிடம் அன்பளிப்புகளை பெறவும், புத்தக பதிப்பாசிரியர்களிடம் ஆசிரியர்கள் அன்பளிப்பு மற்றும் பரிசுகள் பெறவும் அகில இந்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில, தேசிய அளவில் குழு அமைக்கப்படவுள்ளது.

பள்ளி நேரம் போக காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன் நடத்துவதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது என அகில இந்திய கல்வி கவுன்சிலுக்கு புகார்கள் சென்றன. இக்கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.சர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஆசிரியர்களின் ஒழுக்க விதிகள் குறித்து ஆய்வு நடத்தியது.

முடிவில் இக்குழு தேசிய கல்வி கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், “மாணவர்கள் படிக்காவிட்டாலும், ஆசிரியர்கள் தங்களை தண்டிக்க கூடாது என்பதற்காக அவரிடம் சில மாணவர்கள் டியூசனுக்கு செல்கின்றனர். அதிக மதிப்பெண் பெறுவதற்காக டியூசனுக்கு செல்கின்றனர். மாதம்தோறும் ஆசிரியர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை முறைகேடாக கருத வேண்டியுள்ளது.

காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன்கள் எடுப்பதால், பள்ளிகளில் தொடர்ந்து அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. பள்ளிகளில் கல்வி கற்பிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளியில் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்காக வெளியிடங்களில் டியூசன் நடத்துவதானது ஆசிரியர் பணி ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை விதிக்க வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நிறுவனங்களிடம் அன்பளிப்போ, பரிசுகளோ பெறக்கூடாது. பிற ஆசிரியர்கள், புத்தக பதிப்பாளர்களிடம் அன்பளிப்போ, பரிசுகளையோ பெற்றுக்கொண்டு, அந்த பதிப்பாளரின் புத்தகத்தை மாணவர்கள் வாங்குவதற்கு பரிந்துரை செய்வது சட்ட விரோதம். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து மாநில, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி அவர்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி தேசிய கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தடை உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய, மாநில, மாவட்ட அளவில் கல்வியாளர்கள் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி, புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். மாவட்ட கமிட்டி பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, மாநில கமிட்டியிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட கமிட்டி தலைவராக கலெக்டர், மாநில கமிட்டி தலைவராக பள்ளி கல்வி இயக்குனர் செயல்படுவர். விதிமுறைகளை மீறி டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்கும் அதிகாரம் கல்வியாளர்கள் கமிட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *