கோவை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 3000 வேட்பாளர்களை களம் இறக்க இரண்டு அமைப்புகள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு அமைப்புகளும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளன.
திருப்பூர் பிராந்தியத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டுள்ளன. இங்குள்ள தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் திருப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்களை சுயேச்சையாக போட்டியிட வைக்க திருப்பூர் தொழில் பாதுகாப்பு கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதேசமயம், திருப்பூர் பிராந்தியத்தில் சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நிரந்தர முடிவு காண வலியுறுத்தி ஆயிரம் வேட்பாளர்களை களம் இறக்க சென்னையைச் சேர்ந்த வாக்காளர் உரிமை இயக்கம் ஆகியவை முடிவு செய்துள்ளது.
திருப்பூரில் தெற்கு, வடக்கு என இரு தொகுதிகள் உள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 3000 பேரை வேட்பாளர்களாக களம் இறக்கவுள்ளதால் திருப்பூர் தேர்தல்களம் பெரும் சூடு பிடித்துள்ளது.
தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தொகுதியில் அதிகபட்சம் 64 வேட்பாளர்களே போட்டியிட தற்போது வசதி உள்ளன. அதற்கு மேல் எண்ணிக்கை கூடினால் வாக்குப் பதிவுச் சீட்டு முறை பயன்படுத்தப்படும்.
திருப்பூரில் ஆயிரக்கணக்கான பேர் போட்டியிட்டால், அவர்களது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டால் பெரும் சிக்கலை தேர்தல் ஆணையம் சந்திக்க நேரிடும். புத்தக வடிவில்தான் வாக்குச் சீட்டை அச்சடிக்க நேரிடும். மேலும் ஏராளமான வாக்குப் பெட்டிகளும் ஒவ்வொரு சாவடிக்கும் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply