ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம் : சீனாவை பின்னுக்கு தள்ளியது

posted in: உலகம் | 0

லண்டன் : ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.உலகிலேய ஆயுத தள வாட இறக்குமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக, இந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2006 – 10ம் ஆண்டில் நடந்த ஆயுத சப்ளையில், சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஓன்பது சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது.

இதில், ரஷ்யாவில் இருந்து தான் அதிகபட்சமாக 82 சதவீத ஆயுதங்கள் சப்ளையாகியுள்ளது. சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை அதிக இறக்குமதி செய்ததில், இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகள் உள்ளன. இந்தியா ஓன்பது சதவீதம், சீனாவும், தென்கொரியாவும் ஆறு சதவீதம், பாகிஸ்தான் ஐந்து சதவீதம்.இதில் போர் விமானங்கள்,போர் கப்பல்களும் அடங்கும்.இதற்கு முந்தைய 2000 – 2005ம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது. இந்தாண்டை விட கடைசி ஐந்தாண்டில் ஆயுத இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 71 சதவீதம் போர் விமானங்களே இடம் பிடித்துள்ளன. வரும் ஆண்டுகளிலும், இந்தியா தான் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும். ஆயுதங்கள் விமானங்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஆர்டர்களை புக்கிங் செய்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்களை சந்திக்கும் பொருட்டும், மேலும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை போட்டி போட்டு ஆயுதங்களை குவிக்கிறது. இந்த நிலையில் அதற்கு இணையாக இந்தியாவும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, இந்த ஆய்வுகளை வெளியிட்ட மையத்தின் சீமோன் மெஸ்மென் தெரிவித்தார்.

இந்தாண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டுகளை விட 40 சதவீதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம் ஆயுத இறக்குமதிக்கே போய்விடும். போருக்கான ஜெட் விமானங்கள் 126ம், 200 ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் அடங்கும். சீனாவின் ஆயுத இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம், உள் நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முழுவீச்சில் இறக்கிவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் வெற்றி பெற வில்லை.உலகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. சர்வதேசஅளவில் பல்வேறு நாடுகளுக்கு சப்ளையாகும் ஆயுதங்களில் 30சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யா, ஜெர்மனியும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *