இங்கிலாந்தை நொறுக்கி அயர்லாந்து அட்டகாச வெற்றி

பெங்களூர்: இங்கிலாந்துடனான போட்டியில் சிக்கித் திணறிப் போன இந்தியாவுக்கு, எப்படி பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், அபாரமாக ஆடிய அயர்லாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இங்கிலாந்து, அயர்லாந்து இடையிலான சுற்றுப் போட்டி நடந்தது. இதே மைதானத்தில்தான் சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவும், இங்கிலாந்தும் சந்தித்தன. அப்போட்டியில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டியபோதிலும், பவுலிங்கில் சொதப்பி எடுத்ததால், போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் டையில் போய் முடிந்தது.

இந்த நிலையில் இதே மைதானத்தில் நேற்று இங்கிலாந்தும், அயர்லாந்தும் சந்தித்தன. இந்த இரு அண்டைநாடுகளும் இதற்கு முன்பு நான்கு முறை மோதியுள்ளன. நான்கிலும் இங்கிலாந்தே வென்றிருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முயற்சிப்போம் என்று அயர்லாந்து கேப்டன் வில்லியம் பாட்டர்பீல்ட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சொன்னதற்கேற் அயர்லாந்து அபாரமாக ஆடி அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தி விட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து சிறப்பாக ஆடி ரன்களைக் குவி்த்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்களை அந்த அணி எடுத்தது.

இந்தப் பெரிய ஸ்கோரை செஸ் செய்வது கடினமானது என்ற நிலையில் அயர்லாந்து பேட்டிங் செய்ய வந்தது. கேப்டன் பாட்டர்பீல்ட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் ஸ்டிர்லிங் அபாரமாக ஆடி 28 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்காக ஆடிய எட் ஜாய்ஸ் நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி வீரர் நியால் ஓ பிரையன் தன் பங்குக்கு 29 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். வில்சன் 3 ரன்களில் வீழ, ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்ற கஷ்டமான நிலையில் இருந்தது.

ஆனால், நியால் ஓ பிரையனின் சகோதரரான கெவின் ஓ பிரையன் வசம் ஆட்டம் வந்ததும் நிலைமையே மாறிப் போனது. படு அனாயசமாக ஆடிய கெவின், இங்கிலாந்து பந்து வீச்சை தவிடுபொடியாக்கி பெங்களூர் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை மிரட்டி விட்டார். வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கும், சிக்சருக்குமாக விரட்டிய அவர் வெறும் 50 பந்துகளில் சதம் போட்டு புதிய சாதனை படைத்தார். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் குறைந்த பந்துகளில் போடப்பட்ட சதம் இதுதான்.

தொடர்ந்து அதிரடியாகவே ஆடிய கெவின் 63 பந்துகளில் 113 ரன்களைக் குவித்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி விட்டார்.

அவருடன் இணைந்து குசாக் 47 ரன்களைக் குவித்தார். மூனி தன் பங்குக்கு 33 ரன்களைச் சேர்க்க, 49.1 ஓவர்களில் 7 விக்கெட்களை மட்டும் இழந்து அயர்லாந்து, இங்கிலாந்தை தோற்கடித்து புதிய சாதனை படைத்தது.

மின்னோ என்று வல்லரசு அணிகளால் கேலி செய்யப்பட்டு வந்த ஒரு அணி, இங்கிலாந்தை பின்னிப் பெடலெடுத்த விதம் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

மேலும் மிகப் பெரிய ஸ்கோரை தன்னம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் சேஸ் செய்தால் எட்ட முடியும் என்பதையும் அயர்லாந்து நேற்று நிரூபித்தது.

மேலும், கால்பந்து, ரக்பி ஆகிய போட்டிகளில் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும், போட்டியாளராக திகழும் அயர்லாந்து, கிரிக்கெட்டிலும் நேற்று இங்கிலாந்துக்கு பெரும் சவாலைக் கொடுத்து விட்டது.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து ஆடிய டையில் முடிந்த போட்டிதான் மிகப் பரபரப்பான போட்டியாக கருதப்பட்டது. ஆனால் அதை நேற்று நடந்த அயர்லாந்து, இங்கிலாந்து இடையிலான போட்டி ஓவர்டேக் செய்து விட்டது.

பிரமாதமாக ஆடிய நியால் ஓ பிரையன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவரது 113 ரன்களில் 6 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 1992ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி இரண்டாவது பேட் செய்து 313 ரன்களைக் குவி்த்ததே அதிகபட்ச சேஸ் ஸ்கோராக இருந்தது. அதையும் நேற்றைய போட்டியில் அயர்லாந்து முறியடித்து விட்டது.

தனது அடுத்த போட்டியில் இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரித்து, தெளிவான முறையில் பந்து வீசாவிட்டால் இங்கிலாந்தை விட மோசமான தோல்வியை சந்திக்க நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *