மாமல்லபுரம் : “”இந்திய அணு உலைகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து இயக்கப்படுவதால் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் பாதிப்பு ஏற்படாது,” என, இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார்.
ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள அணுஉலைகள் வெடித்துச் சிதறின. இதனால், இந்தியாவிலும் அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணுமின் கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.ஜெயின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் நேற்று கல்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், அணுமின் நிலையங்கள் உடனடியாக செயலிழந்தன. சுனாமியால்தான் மக்கள் இறந்துள்ளனர். கதிர்வீச்சால் மக்கள் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி தாக்குதலுக்குப் பின், வெப்பத் தணிப்பான்கள் செயலிழந்ததால் வெப்பம் அதிகரித்து வெடித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பின், கதிர்வீச்சில் புதிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சில நாட்களிலேயே கதிர்வீச்சும் குறைந்து விட்டது. அணுஉலைகளின் கட்டமைப்பில் எவ்வித மாறுதலும் இல்லை. பொதுமக்கள் ஆண்டிற்கு ஆயிரம் சீவர்ட் அளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம். அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆண்டிற்கு 50 ஆயிரம் சீவர்ட் அளவு உள்வாங்கலாம். இது இயல்பானது. ஜப்பான் கடலோரம் பூகம்ப மையத்திற்கு அருகிலேயே இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்திய அணுஉலைகளைப் பொறுத்தவரை முறையான பாதுகாப்புடன் உள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கினாலும், சில வினாடிகளிலேயே தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அணு உலைகளைப் பெற்றாலும், நம்நாட்டு சூழ்நிலைக்கேற்ப இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம். கூடங்குளத்தில் அதிகபட்ச பாதுகாப்புடன் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கதிர்வீச்சு ஏற்பட்டால் ஆசிய நாடுகளையும் தாக்கும் எனத் தகவல் பரவியுள்ளது. ஆசியநாடு என்பது ஜப்பான் அருகில் உள்ள நாடுகளை குறிக்கும். சர்வதேச அணுசக்தி ஏஜன்சி மூலம் அங்குள்ள நிலவரம் அறியப்படுகிறது. இந்தியாவில் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை பொதுவான கதிர்வீச்சு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருவரும் தெரிவித்தனர். சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி, பாவினி அணுமின் திட்ட இயக்குனர் பிரபாத்குமார் உடனிருந்தனர்.
Leave a Reply