டெல்லி: இந்த ஆண்டு 500 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக போர்ச்சே ஆட்டோவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளரான பிரிசிஸன் கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த போர்ச்சே ஆட்டோ நிறுவனம் சொகுசு கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் போர்ச்சே கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் போர்ச்சே கார்கள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவில் போர்ச்சே ஆட்டோவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக பிரிசிஸன் கார்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் போர்ச்சே கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, இந்த ஆண்டில் கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரிசிஸன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிசிஸன் கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஒ.,) கூறியதாவது:
“இந்தியாவில் போர்ச்சே கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 131 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை மட்டும் 217 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டில் 500 கார்களை விற்பனை செய்ய புதிய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 5 மடங்கு கூடுதலாகும். கேயன்னி எஸ்யூவீ கார்கள் முன்பதிவு செய்ததிலிருந்து 500 நாட்களிலும், ஸ்போர்ட்ஸ் கார்களை 100 நாட்களிலும் இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்படுகிறது.
மேலும், விற்பனையை அதிகரிக்கும் வகையில் பெங்களூர், சண்டிகர், ஆமதாபாத், மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் புதிய டீலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார்.
Leave a Reply