விவசாய நாடான இந்தியாவில் புதிய வேளாண் விஞ்ஞானிகள் உருவாவதில் 50 விழுக்காடு அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ருமென்ட் போர்ட் (ஏ.எஸ்.ஆர்.பி.) நிர்வாகி சி.டி. மயி மீரட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் இளநிலை வேளாண் விஞ்ஞானிகள் உருவாவதில் 50 விழுக்காடு அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூத்த விஞ்ஞானிகள் எண்ணிக்கையில் 20 விழுக்காடு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஏ.எஸ்.ஆர்.பி., அக்ரிகல்சுரல் ரிசர்ச் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது. சுமார் 290 காலி இளநிலை விஞ்ஞானிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
ஆனால் 130 முதல் 140 பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடிகிறது என்றார் அவர்.
மீரட்டில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தில் தரமான விதைகள் குறித்த நேஷனல் கன்சல்டேஷன் கூட்டத்தைத் துவக்கி வைத்த மயி, வேளாண் விஞ்ஞானிகள் பற்றாக்குறையால், வேளாண் பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை அளிக்க முடியாமல் போகிறது. கல்வியின் தரம் குறைவதன் விளைவாக திறமையான மாணவர்களின் எண்ணிக்கைக் குறைகிறது என்று தெரிவித்தார்.
எனவே பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நல்லத் தரமான விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்.
வேளாண் துறைக்கு நல்ல வேளாண் ஆசிரியர்கள் தேவை. மாணவர்களின் தரம் குறைந்து கொண்டே போவதால், இதுதான் தற்போதைய முக்கியத் தேவையாக உள்ளது என்றார் அவர்.
மேலும் பேசுகையில், தமிழ்நாடு மற்றம் தார்வாத்தில் செயல்படும் வேளாண் பல்கலைக் கழகங்கள் தன்னிகரற்ற பணிகளை செய்து வருகின்றன. அதோடு ஒப்பிடும் போது பஞ்சாப் மற்றும் பான்ட்நகர் பல்கலைக் கழகங்களில் ஏறக்குறைய ஆசிரியர்களே இல்லை என்று சொல்லலாம் என்றார்.
Leave a Reply