இந்தியாவை புறக்கணித்து இலங்கை, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரியது : விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்கள் தொழிற்படாமையினால், இலங்கை அரசாங்கம் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்காவிடம் ரேடார்களை கோரி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விக்கி லீக்ஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரேடார்கள், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை அவதானிக்கவும், தடுக்கவும் போதுமானதாக இருக்கவில்லை என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கையின் வான் படையினரின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் திறனை வலுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்காவின் இராணுவ குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கோரியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது

கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்துக்கும் அவர் கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகளின் விமானங்கள், தாக்கியதைத் தொடர்ந்து, அவசர கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு எம்.ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் பழுதடைந்தமை தொடர்பில் பேசப்பட்டது.

அத்துடன் இந்த தாக்குதலை நடத்த விடுதலைப்புலிகள் தயராகின்றமையை, இந்தியா வழங்கி இருந்த ரேடாரினால் கண்காணிக்க முடியாது போனமை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அமெரிக்க தூதரகம் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அனுப்பப்பட்ட இரகசிய தொலைத் தொடர்பு தகவல் அடிப்படையில், இந்தியாவின் ரேடார்கள் வி;டுதலைப் புலிகளை கண்காணிக்க போதுமானதாக இல்லை என கோட்டாபய தெரிவிக்கப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியாவை புறக்கணித்து, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரிய செய்தி அந்த காலப்பகுதியில் வெளியான போதும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.

பல வருடங்களின் பின்னர் இந்தியா இரண்டு ரேடார்களை வழங்கி இருந்தது. அவை இரண்டும் இருபரிமான ரேடார்களாக அமைந்துள்ளது. அத்துடன் மேலும் இரண்டு இருபரிமான ரேடார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தாம் இந்தியாவிடம் முப்பரிமான ரேடர்களை வழங்குமாறு கோரிய போதும், அவை இதுவரையில் வராததன் காரணமாக, சீனாவில் இருந்து முப்பிமான ரேடார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளோம் அதுவே தற்போது செயற்பாட்டில் உள்ளது என கோட்டாபய அமெரிக்க தூதரகத்திடம் தெரிவித்திருந்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்களில் இரவு வேளையில் வான்பரப்பில் செல்லும் உலங்கு வானூர்திகளைக் கூட கண்காணிக்க முடிவதில்லை என கோட்டாபய, ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க தாக்குதலின் போது, வவுனியாவில் உள்ள ரேடார் விடுதலைப் புலிகளின் வானூர்தியை அவதானித்து. அதன் பின்னர் இறுதி நேரத்திலேயே கட்டுநாயக்கவில் உள்ள பொது ரேடாரால் அதனை அவதானிக்க முடிந்தது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள், வடக்கில் இருந்து மேற்கு கரை ஊடாக கொழும்புக்கு வந்து, தாக்குதல் நடத்தி விட்டு, மீண்டும் வடக்கு பகுதிக்கு சென்றுவிடக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்கக்கூடிய வகையில், அமெரிக்கா ரேடார்களை வழங்க வேண்டும் என கோட்டாபய கோரிக்கையை முன்வைத்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *