இலங்கை போர் விமானங்கள் மோதல்: புலிகள் மீது தாக்குதல் நடத்திய விமானி பலி!

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கையில் நேற்று திடீரென்று இரு போர் விமானங்கள் மோதிக் கொண்டு சுக்குநூறாக சிதறின. இதில் ஒரு விமானி பலியானார். மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார்.

விமானப் படையின் ஒத்திகையின் போது நடந்த இந்த விபத்து காரணமாக பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இலங்கை அரசுக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட விமானங்களில் இரண்டுதான் நேற்றைய விபத்தில் சுக்கு நூறாகச் சிதறின.

அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிபீர் விமானங்கள் இவை.

இலங்கை, ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகள் மட்டுமே தற்போதைக்கு கிபீர் விமானங்களை வாங்கி வைத்துள்ளன.

இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மற்றும் தலைவர்களைத் தேடித்தாக்கி அழிக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்கு கிபீர் விமானங்கள் பெரும் உதவியாக இருந்தன.

புலிகளின் நிலைகளை அழித்த விமானி…

இந்த விபத்தில் லெப்டினன் மொனாத் பெரேரா என விமானி உடல் சிதறி இறந்தார். இவர்தான் முன்பு இறுதிப் போரில் புலிகளின் பல இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே விமானப்படையின் அறுபதாம் ஆண்டு நிறைவுக் கண்காட்சியில் அவருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது.

மொனாஷ் பெரேராவின் சடலத்தின் தலை மட்டும் தென்னை மரமொன்றின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலின் ஏனைய பாகங்கள் கிடைக்கவில்லை. தீயில் கருகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார். சம்பவ இடத்திலிருந்த சிவிலியன் ஒருவரும் இதில் படுகாயமடைந்தார்.

விமான விபத்தை ஆராய ஐந்து பேர் கொண்ட குழு:

இந்த விமான விபத்தைக் கேள்வியுற்றதும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

விபத்து குறித்து விசாரிக்க ஏர் வைஸ் மார்ஷல் கபில ஜயதிலக தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *