ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது-உச்சநீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பி.ஜே.தாமஸ். இவர் அந்த மாநில உணவுத்துறை செயலாளராக இருந்தபோது பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் பெரும் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உள்ளிட்டோர் மீது கடந்த 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாமஸ், ரூ. 2.8 கோடி ஊழல் செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தாமஸை, மத்திய அரசு, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து உத்தரவிட்டது. இதை ஆரம்பத்திலேயே பாஜக கடுமையாக எதிர்த்தது. பிரதமரிடமும் இதுகுறித்து பாஜக எடுத்துக்கூறியது. இருப்பினும்அதை மீறி தாமஸை ஆணையராக அறிவித்தது மத்திய அரசு.

இதையடுத்து தாமஸ் நியமனம் சட்டவிரோதமானது, ஊழல் வழக்கில் சிக்கியவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஊழல் வழக்கில் சிக்கியவரை எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக போடலாம் என்று மத்திய அரசு கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து தாமஸை பதவியிலிருந்து விலக வைக்க மத்திய அரசு கடுமையாக முயன்றது. ஆனால் அவர் பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். அதில், தாமஸ் நியமனம் செல்லாது என்று கூறிய உச்சநீதி்மன்றம், அவரது நியமனம் விதிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் விரோதமானது என்று அறிவித்தது.

தாமஸ் நியமனம் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்படுகிறது.

தாமஸ் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறுகையில், ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தை கோர்ட் பரிசீலிக்க முடியாது என்று தாமஸும், மத்திய அரசும் கூறுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு சட்டப்பூர்வமான நியமனத்தையும், பரிந்துரையையும் கோர்ட் பரிசீலிக்க முடியும், சட்ட ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

இந்த நியமனத்தின் மூலம் அடிப்படைத் தன்மையே கேள்விக்குறியதாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.

இனிமேல், இப்பதவிக்கு நியமனம் மேற்கொள்ளும்போது சிவில் பணிகளில் உள்ளவர்களை மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் உள்ள நேர்மையான, அப்பழுக்கற்ற, ஒழுக்கமானவர்களை தேர்வு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பதவியிலிருந்து விலகினார் தாமஸ்:

உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை பிறப்பித்ததைத் தொடர்ந்து தற்போது பி.ஜே. தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பதவியிலிருந்து விலகுமாறு தொடர்ந்து நெருக்குதல் கொடுக்கப்பட்டபோதெல்லாம் விலகாமல் இருந்து மத்திய அரசை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய தாமஸ் தற்போது தானும் அவமானப்பட்டு, மத்திய அரசையும் அசிங்கப்படுத்தி விட்டு விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பை மதிக்கிறேன்-பிரதமர்:

பி.ஜே.தாமஸ் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

எதிர்க்கட்சிகள் வரவேற்பு-அரசுக்குக் கண்டனம்:

இதேபோல எதிர்க்கட்சிகளும் தாமஸ் தொடர்பான உச்சநீதி்மன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதேசமயம் அரசையும் கடுமையாக கண்டித்துள்ளன.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்த தீர்ப்பின் மூலம் அரசின் ஊழல் நிரூபணமாகியுள்ளது. ஊழல் கறை படிந்த ஒருவரை எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க அரசு முடிவு செய்தது என்பதை விளக்க வேண்டும்.

மிகப் பெரிய அரசியலமைப்புத் தவறை பிரதமர் செய்துள்ளார். இதற்கு அவர் பதிலளித்தாக வேண்டும் என்றார்.
Read: In English
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், இந்த விவகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றார்.

ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், இந்த நியமனத்தை முடிவு செய்த குழுவில் இடம் பெற்றிருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *