என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! – சொல்கிறார் விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

வாழப்பாடி: நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா… நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், அதை சுட்டிக் காட்டிய வேட்பாளர் பாஸ்கரை அவர் அடித்ததாகவும் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் தகவல் வெளியானது.

அவரது இந்த செயலுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி பிரச்சாரங்களிலும் இந்த செயல் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஜயகாந்த் தனது உதவியாளரை மைக்கை சரி செய்து கொடுக்காததால் அடித்ததாக மற்றொரு செய்தி வெளியானது. ஆனால் இதை விஜயகாந்த் மறுத்தார்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பெருமாளை ஆதரித்து அவர் பேசும் போது இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

விஜயகாந்த் கூறுகையில், “நான் வேட்பாளரை அடித்ததாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். அட ஆமாய்யா, அடிச்சேன். என் ஆளைத்தானே அடித்தேன். என்னைப்பற்றி என் கட்சிகாரர்களுக்குத்தான் தெரியும்.

தப்பு நடந்தால் தட்டி கேட்பது இந்த விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் இன்று அடிவாங்கியவன் நாளை மாகாராஜா ஆவான். நான் சினிமாவில் காசு பார்த்து விட்டு அரசியலுக்கு வந்தவன்.

அரசியலில் காசு பார்க்க வரவில்லை. சாதி, மதத்தை வெறுக்கின்றவன் நான். காய்கறி, பெட்ரோல் விற்கிறவன் சாதியை பார்த்தா விற்கிறான்? இங்கு கூடி இருக்கிற நீங்கள் எந்த ஜாதி என எனக்குத் தெரியாது”, என்றார்.

நான் அவனில்லை…. – சொல்கிறார் பாஸ்கரன்!

இதற்கிடையே, விஜயகாந்திடம் அடிவாங்கிய அனுபவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, “தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி…”, என்றார்.

என் ஆளைத்தானே அடித்தேன் என்று விஜயகாந்தே ஒப்புக் கொண்ட பிறகும், பாஸ்கரன் என்னமாய் சமாளிக்கிறார் பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *