எம்.பி.,க்களுக்கு லஞ்சம்: “விக்கிலீக்ஸ்’ வீசிய குண்டால் நடுங்கியது பார்லி.,

posted in: மற்றவை | 0

கடந்த ஆட்சியில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்த விவகாரம், மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

இது பற்றி விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள தகவல்களால் பார்லிமென்டின் இரு அவைகளிலும் பெரும் புயல் வீசியது. ஆளும் கட்சியை நோக்கி அனைத்து எதிர்க்கட்சிகளும் அனலை கக்கினர். ஒரு நிமிடம் கூட பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்கவே கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளதால், பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பிற்காக எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விக்கிலீக்ஸ் ரகசியங்களை ஆங்கில பத்திரிகை, தகவல் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி, சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவரான சதீஷ் சர்மா என்பவரது இல்லத்திற்கு அந்த அதிகாரி அழைக்கப்பட்டு, 60 கோடி ரூபாய் பணத்தை சர்மாவின் உதவியாளரான நச்சிகட்டா கபூர் என்பவர் காட்டினார். பின்னர் அந்த அதிகாரியிடம் சதீஷ் சர்மா, இந்த பணம் எல்லாம் எம்.பி.,க்களுக்கு அளிக்கவிருப்பதாகவும், இதனால் அரசாங்கம் கவிழும் என அச்சப்படத் தேவையில்லை. ஏற்கனவே அஜித் சிங் கட்சி எம்.பி..க்களுக்கு தலா 10 கோடி ரூபாய் தரப்பட்டுவிட்டது. பா.ஜ.,வில் கூட ரஞ்சன் பட்டாச்சார்யா மூலம் சில எம்.பி.,க்களை அவைக்கு வர விடாமல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, நேற்று பார்லிமென்டை கலக்கி எடுத்துவிட்டது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய குருதாஸ் தாஸ் குப்தா குறிப்பிடும் போது, “பிரதமர் அவைக்கு வந்தாக வேண்டும். இந்தியாவுக்கு தலைநகர் டில்லியா அல்லது வாஷிங்டனா என்பதை விளக்க வேண்டும்’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும் போது, “லஞ்சம் கொடுத்து அரசாங்கத்தை காப்பாற்றிய செயல் அம்பலமாகியுள்ளது. பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிப்பதற்கு லாயக்கே இல்லை. அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியாவை அவர் ஆக்கிவிட்டார்’ என்றார். பின்னர் காங்கிரசைச் சேர்ந்த சஞ்சய் நிருபம் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் போது, கடும் ரகளை ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் ஆரம்பமாகவே வேறு வழியின்றி அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடியபோதும் அடுத்தடுத்து இதே பிரச்னை வெடித்து கிளம்பிக் கொண்டே இருக்கவே, அவை ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசும் போது, “பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கொடிய பாவத்தை செய்து இருக்கின்றனர்’ என்றார். நிதியமைச்சருக்கும் அருண் ஜெட்லிக்கும் நேருக்கு நேர் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ஒருவரையொருவர் கைநீட்டி வாதம் செய்த போது, அவையில் கடும் அனல் பறந்தது. பிரணாப், “அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ரகசிய தகவல்கள் அவை; அவற்றை பற்றி அவையில் விவாதிக்க முடியாது. தவிர, 14வது லோக்சபாவில் நடைபெற்ற சம்பவத்திற்கு இப்போது நடைபெறும் 15வது லோக்சபா பொறுப்பேற்க முடியாது’ என்றார். பின்னர் அடுத்தடுத்து கூடியபோதும் நடத்த முடியாமல் அவை, நாள் பூராவும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *