கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் “சீட்’ ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக தி.மு.க., வசமிருந்த தொகுதிகள் 119.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் வெறும் 51 சதவீதத்தில் மட்டும் தி.மு.க., வேட்பாளர்கள் களம் காணும் நிலை, இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இந்த 51 சதவீதத்தில் 15 சதவீதம், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சென்றுள்ளதால், “சீனியர்’ உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வி.பி.துரைசாமி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன், ரகுபதி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு வந்த பழைய முகங்கள். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வான அனிதா ராதாகிருஷ்ணன் ஓராண்டுக்கு முன் தி.மு.க.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்பட்ட கடலாடி சத்தியமூர்த்தி தி.மு.க.,வில் இணைந்ததற்கு பரிசாக, அவருக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இரு மாதங்கள் முன் வரை, “அம்மா’ புகழ் பாடிய சேகர்பாபுவுக்கும் சீட் கிடைத்துள்ளது. இவர்களையெல்லாம், “இழுக்கும்’ பணியில் ஈடுபட்ட ஈரோடு முத்துசாமியும் தி.மு.க., சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.

வைகோவின் தலைமையை ஏற்று ம.தி.மு.க.,வுக்கு சென்று திரும்பியவர்களுக்கும் இந்த வேட்பாளர் பட்டியலில் கணிசமான இடம் கிடைத்துள்ளது. கரூர் கே.சி.பழனிச்சாமி, திருச்சி செல்வராஜ், மைதீன்கான் என கொஞ்ச நாளிலேயே தாயக்கழகத்திற்கு திரும்பியவர்களுக்கு, ஏற்கனவே உரிய மரியாதை தரப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,வை விட்டு கடைசியாக வந்த கோவை கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையிலிருந்து வந்த ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வந்த திருப்பூர் கோவிந்தசாமி ஆகியோரும் தி.மு.க., வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இப்படி தி.மு.க., வேட்பாளர்கள் 119 பேரில் 18 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்.

இது குறித்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க., முன்னணி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என அண்ணா தெரிவித்தார். ஆனால் இன்று, “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தான் மணம் உண்டு’ என்பது போல மாறிவிட்டது. அந்த அளவிற்கு, மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளனர்.மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த இவர்கள் அனைவரும், தத்தம் பகுதியில் இத்தனை நாட்களாக தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர களப்பணியாற்றியவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளதன் மூலம், கட்சிக்காக காலம் காலமாய் கஷ்டப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் சேகர்பாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, மாவட்டச் செயலராக உள்ள வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், சாத்தூர் ராமச்சந்திரன் தன்னை சந்திக்காமல் திருப்பி அனுப்பியதை திருச்சி சிவா வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதேபோல் தான், கட்சித் தலைமையை மதிக்காமல் ம.தி.மு.க.,விற்கு ஓடியவர்களுக்கும் முதல் மரியாதை செய்யப்பட்டுள்ளது.தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்தவர்களை, வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு கட்சி தலைமை ஆயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால், குறிப்பிட்ட தொகுதியில் நமக்கும் என்றைக்காவது வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து கட்சிப் பணியாற்றும் நிர்வாகி இந்த அறிவிப்பை எப்படி ஏற்பார்?இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,விலும்… : அ.தி.மு.க., வெளியிட்டுள்ள 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலிலும், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து வந்த பழ.கருப்பையா, ஐ.என்.டி.யு.சி.,யில் இருந்து கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க., வில் ஐக்கியமாகி 14 ஓட்டு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ.,வான சின்னச்சாமிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த ராஜ.கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் தாய் கழகம் திரும்பிய நிலையில் அவர்களுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.,வில் இணைந்தார். நீண்ட கால காத்திருப்புக்குப் பின் அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *