கரண்ட்டை காசு கொடுத்து வாங்குங்கள், திருடாதீர்கள்-கட்சிகளுக்கு மின்வாரியம் கோரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரத்தை திருடக் கூடாது. மாறாக முறையாக பணம் கட்டி மின்சாரத்தைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றின்போது கொக்கி போட்டு மின்சாரத்தை திருடுவது சகஜமானது. இதை இதுவரை யாரும் தடுக்க முற்பட்டதே இல்லை. அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, புதிதாகப் பிறந்த குட்டிக் கட்சிகளாக இருந்தாலும் சரி, பாரபட்சமின்றி அத்தனை பேரும் கொக்கி போட்டு மின்சாரத்தை உறிஞ்சுவது காலம் காலமாக நடந்தேறி வருகிறது.

தற்போது சட்டசபைத் தேர்தல் வந்துள்ளது. இதையடுத்து கூட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்தக் கூட்டங்களால் மக்களின் காதுகள் மட்டுமல்லாமல், மின்வாரியத்தின் மின்சாரமும் கடுமையாக பாதிக்கப்படப் போகிறது.

இதையடுத்து மின்வாரியம் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், அரசியல் கட்சியினர் தாங்கள் நடத்தும் தேர்தல் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு மின்சாரத்தை கொக்கி போட்டு திருடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, தற்காலிக மின் இணைப்பு பெற்று, முறையாக பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.

திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து பொதுக் கூட்டங்களுக்கு மின் விளக்கலங்காரம், ஒலிபெருக்கிக்குத் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்துவதை கட்சியினர் கடைப்பிடிக்கக் கூடாது.

உரிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை நாடி தற்காலிக இணைப்புக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வரும் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து தற்காலிக மின் சேவைக்கு அனுமதி வழங்குமாறு உதவி செயற்பொறியாளர்களையும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *