கருணாநிதியிடம் தோற்ற ராகுல் காந்தியின் ‘பார்முலா’!

posted in: அரசியல் | 0

சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையை நீக்க தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வருவார் என்று தெரிகிறது.

90 இடங்கள், கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவிகள், குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்புக் குழு என திமுகவிடம் ஐந்து நிபந்தனைகளைப் போட்டது ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சி.

ஆனால், 53 தொகுதிகள் மட்டும் தரப்படும் என்ற ஒரே ஒரு பதிலை மட்டும் திமுக தந்தது. வேண்டுமானால் தொகுதிகளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.. மற்றபடி கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவிகள், குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்புக் குழு பற்றி காங்கிரஸ் கனவு மட்டுமே காணலாம் என்றரீதியில் பதில் தந்துவிட்டது திமுக.

மேலும் காங்கிரசை நெருக்கும் வகையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கூட்டணியில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வருகிறது திமுக.

நிலைமை இப்படியே போனால் கடைசியில் 53 தான் மிஞ்சும் என்பதை உணர்ந்துவிட்ட காங்கிரஸ் இப்போது, கேட்கும் இடங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளதோடு, தனது அனைத்து நிபந்தனைகளையும் கிடப்பில் போடவும் தயாராகி்விட்டது.

நிபந்தனைகளைத் தளர்த்தினால் இடங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்ற நிலையை திமுகவும் எடுத்துள்ளது. சுமார் 65 இடங்கள் வரை திமுக தரத் தயார் என்று டெல்லியில் நேற்று செய்தி பரவியது. ஆனால், இதில் உண்மையில்லை.. அதிகபட்சம் 60 இடங்கள் வரை தரப்படலாம் என்கிறது திமுக தரப்பு.

இந் நிலையில் திமுகவிடம் 53 இடங்களை விட அதிகமாக ஓரிரு இடங்கள் வாங்கிவிட்டாலே போதும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாளித்துவிட முடியும் என்ற நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

நேற்று காங்கிரஸ் ஐவர் குழுவிடம் சோனியா ஆலோசனை நடத்தியபோது, 90 தொகுதிகள் வரை கேட்டோம்.. அதை 78 தொகுதிகளாகக் குறைத்துக் கொண்டோம். மற்ற நிபந்தனையும் விட்டுத் தரத் தயாராக இருப்பதையும் சொன்னோம். ஆனால், 53க்கு மேல் ஒரு சீட் கிடையாது என்று திமுக அடம் பிடிக்கிறது. அவர்களிடம் அதிகபட்சம் 60 இடங்களை வாங்க முடியும் அவ்வளவு தான் என்பதை விளக்கியுள்ளனர்.

இதையடுத்து இந்தக் குழுவினரை வெளியே அனுப்பிய சோனியா, அதில் இடம் பெற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மட்டும் மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது விட்டுக் கொடுத்து போவது என்றும், குலாம் நபி ஆசாதை சென்னைக்கு அனுப்பி முதல்வர் கருணாநிதியுடன் நேரில் பேச வைப்பது என்றும் முடிவானதாகத் தெரிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் ஆசாதின் வீட்டில் நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஓரிரு நாட்களில் ஆசாத் சென்னை வந்து திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார் என்று தெரிகிறது.

5 நிபந்தனைகளுடன் திமுகவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ‘ராகுல் காந்தியின் பார்முலா’ முதல்வர் கருணாநிதியுடம் படுதோல்வி அடைந்துள்ளது. 3,4 சீட்களாவது அதிகமாகக் கிடைத்தால் தொகுதிப் பங்கீட்டை செய்து கொள்ளலாம் என்ற நிலைமைக்கு காங்கிரசை தள்ளியுள்ளார் கருணாநிதி.

ராகுல் காந்தி காலில் மாவுக் கட்டு!:

இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மாவுக் கட்டு போட்டுள்ளனர். சில வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

5 மாநில சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் ராகுல் காந்திக்கு காலில் காயம் ஏற்பட்டிருப்பது காங்கிரஸாரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்தி உடற் பயிற்சி செய்தபோது காலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சாதாரண சதைப் பிடிப்பு என்று நினைத்த ராகுல் காந்தி பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டார். இந்த நிலையில் அவருக்கு காலில் வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து எக்ஸ்ரே பார்த்தபோது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ள வலது கால் முழுவதும் கட்டுப் போட்டுள்ளனர். அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சமீபத்தில் லோக்சபாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது ராகுல் காந்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *