சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது.
ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான மனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான 63 தொகுதிகளை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் நிலவியது. பெரும் மோதல், இழுத்தடிப்புக்குப் பின் அந்தக் கட்சிக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. காங்கிரசுக்கான தொகுதிகளை முடிவு செய்யும் முன்பே பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிகளை திமுக முடிவு செய்துவிட்டது.
இதனால் காங்கிரசுக்கு கடும் கோபம் தான் என்றாலும் இப்போது வேறு வழியில்லை. இதனால் திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்கும் நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டு பட்டியலும் தயாராகிவிட்டது.
டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதல் இன்று கிடைக்கும் என்பதால் தொகுதிகள் விவரத்தை முதல்வர் கருணாநிதி இன்றே அறிவிப்பார் என்று தெரிகிறது.
அதே போல திமுகவுக்கான 120 தொகுதிகள், பாமகவுக்கான 30 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகளுக்கான 10 தொகுதிகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கான 7 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க் கட்சிக்கான 2 தொகுதிகள், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் நாடார் அமைப்புகளின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கான தலா ஒரு தொகுதிகளின் பட்டியலும் இன்றே வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதில் இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி அதிகாரப்பூர்வமாக திமுக 124 தொகுதிகள் போட்டியிடுகிறது.
சென்னையை விட்டு ‘ஓடும்’ திமுக:
இந்த முறை அதிகமான கிராமப் புற தொகுதிகள் போட்டியிட முடிவு செய்துள்ள திமுக சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை தர திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல பாமகவுக்கும் ஓரிரு சென்னை தொகுதிகள் தரப்படவுள்ளன.
படித்தவர்கள் அதிகமுள்ள சென்னையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அதிமுகவுக்கு ஆதரவாக ‘ஒர்க்-அவுட்’ ஆகும் என்பதால் இந்த முடிவுக்கு திமுக வந்துள்ளதாகத் தெரிகிறது.
Leave a Reply