மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்ததையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை பல்வேறு நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தின. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2 சதவீதம் உயர்த்தியது.
முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விலை உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் கூறியதாவது:
“கார் தயாரிப்புக்கு தேவைப்படும் ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட முக்கிய கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்படும். அப்போது, கச்சா பொருட்களின் விலை உயர்வை கருத்தில்கொண்டு கார்களின் விலையை உயர்த்துவது குறித்து முடிவு இறுதிஎடுக்கப்படும்,” என்று கூறினார்.
விலை உயர்வு குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ள தகவலால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கார்களின் விலை உயரும் என்று கருதப்படுகிறது.
Leave a Reply