கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைத்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக்கு என பிரத்தியேகமாக புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கடந்த ஜனவரி 7ம் தேதி சட்டசபையில் கவர்னர் அறிவித்தார். இதை நிறைவேற்றும் வகையில் இம்மாதம் 1ம் தேதியன்று கவர்னர் பர்னாலா அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இதன்படி கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
இங்கு தோட்டப் பயிர்கள், செடிகள் கட்டுப்பாடு, பூச்சிகள் மற்றும் நோய்கள், பூக்கள் உட்பட தோட்டக்கலை, களப்பயிர்கள் போன்றவை குறித்த படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். தோட்டக்கலை பயிர் தொடர்பான படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், இப்பல்கலையால் அங்கீகரிக்கப்படும். இது தவிர, கோவை மற்றும் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இதன் இணைப்புக் கல்லூரிகளாகச் செயல்படும்.
மேலும், தமிழகத்தில் உள்ள 15 தோட்டக்கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இதன் கீழ் இயங்கும். இந்த பல்கலை, வேளாண்மைத் துறையின் கீழும், அதன் அமைச்சரின் கீழும் செயல்படும். பல்கலையின் வேந்தராக கவர்னர் இருப்பார். இணை வேந்தராக வேளாண் துறை அமைச்சர் இருப்பார். இது தவிர, துணைவேந்தர், இயக்குனர்கள், டீன்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர், நிதி அலுவலர் போன்றவர்கள் நிர்வாகத்தில் ஈடுபடுவர்.
வேந்தரின் ஒப்புதல் இல்லாமல், யாருக்கும் கவுரவப் பட்டங்கள் வழங்கப்படாது. துணைவேந்தர் தேர்வு, அலுவல் சாரா உறுப்பினர்கள், ஆட்சி மன்றக் குழு போன்ற அனைத்தும் மற்ற பல்கலைகளில் உள்ளது போல, குறிப்பாக வேளாண்மை பல்கலைக் கழகத்தின் விதிகளைப் போலவே இதிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply