சென்னை: கிட்டத்தட்ட 14 மணி நேர இழுபறிக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று முன்தினமே பேச்சுவார்த்தைகள் ரகசியமான முறையில் தொடங்கி
விட்டன.
முதலில் குட்டிக் கட்சிகளின் தலைவர்களை மாலை 4 மணி முதல் சந்தித்து தொகுதி ஒதுக்கீட்டை முடித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் சிபிஐ, தேமுதிக, சிபிஐ ஆகிய கட்சிகளை வரவழைத்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு போயஸ் தோட்டத்திற்கு வந்தது.
அதேபோல சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சிக் குழுவினர் போயஸ் தோட்டம் வந்தனர். அதேசமயத்தில் தேமுதிகவினரும் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கார்டனுக்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பின்னர் மூன்று கட்சிகளுடனும் மாறி மாறி ஜெயலலிதா நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது. மணி 10 ஆனது, 11 ஆனது, 12 மணியையும் தாண்டிப் போனது.
இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சிபிஐக்கு மட்டும் முதலில் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
இதற்கிடையே இரவு 1 மணிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு நடத்த வந்தார். 2 மணியளவில் அவரது கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை தொகுதிகளை கொடுக்க ஜெயலலிதா சம்மதித்தார். அதன் பிறகு உடன்பாட்டில் ஜெயலலிதாவும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கையெழுத்திட்டனர்.
இருப்பினும் சிபிஎம், தேமுதிகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும் சுதீசும் காலையில் (இன்று) பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு இரவு 2.45 மணிக்குக் கிளம்பிச் சென்றனர்.
இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. அந்தப் பேச்சுவார்த்தை அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிடும் 12 தொகுதிகள் தொடர்பாக இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு அந்த கட்சியுடனான உடன்பாட்டில் ஜெயலலிதாவும், ராமகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.
கிட்டத்தட்ட பதிமூன்றரை மணி நேரத்திற்கும் மேலானது தொகுதிகளை ஒதுக்குவதற்கு. இருப்பினும் தேமுதிக பட்டியல் மட்டும் இன்னும் இறுதியாகவில்லை.
Leave a Reply