டெல்லி: தமிழகம் உள்பட ஐந்து மாநிலத்திற்கும் அறிவிக்கப்பட்ட தேதியில்தான் தேர்தல் நடைபெறும். எந்தத் தேதியையும் மாற்றுவது இயலாத காரியம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாகவும், அஸ்ஸாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டங்களாகவும் சட்டசபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதேசமயம், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறுகிறது. இதனால், தமிழகம், புதுவை, கேரளாவில் வாக்குப் பதிவு முடிந்து முடிவை அறிய ஒரு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த தேர்தல் அட்டவணை தமிழகத்தில் பல்வேறு கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி பகிரங்கமாகவே தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், அதிமுக, மதிமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்றக் கோரியுள்ளன.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று இன்று குரேஷி அறிவித்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் பொதுத் தேர்வுகள், திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே, அவற்றை முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் தேதியை மாற்றக்கோரி அதிமுகவிடமிருந்து மட்டுமே கடிதம் வந்தது. வேறு எந்த கடிதமும் வரவில்லை என்றார்.
‘சத்தம் போடாமல் பிரசாரம் செய்ய வேண்டியதுதான்’
பத்து மற்றும் பிளஸ்டூ தேர்வு சமயத்தில் தேர்தல் நடப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்குமே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி என்றால் வேட்பாளர்கள் அதிக சத்தம் இல்லாமல், சத்தமின்றி பிரசாரம் செய்ய வேண்டும். அதிக ஓசையின்றி பிரசாரம் செய்தால் மாணவர்களின் படிப்புக்கு குந்தகம் ஏற்படாது என்றார் குரேஷி.
Leave a Reply