தங்களது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களது கனவையும் நனவாக்கும் திறன் ஒரு பள்ளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் உடற்பயிற்சிக் கல்வியை புதிதாக சேர்க்க சிபிஎஸ்இ பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
வரும் கல்வி ஆண்டில் இருந்து உடற்பயிற்சி அறிவியல், உடல் அமைப்பு, தொழிற் உடற்பயிற்சி, உடல்நலம் போன்ற பாடப்பிரிவுகள் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கு வேண்டும் என்று விரும்பும் மாணவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், விளையாட்டுத் துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பாடப்பிரிவுகள் அமையும்.
பல மாணவர்களுக்கு படிப்பிற்கு அடுத்து நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அபரிமிதமான ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களது வீடுகளில், விளையாட்டை எவ்வாறு ஊக்குவிப்பது என்றோ, அது எந்த வகையில் அவர்களது வாழ்க்கையை சிறந்ததாக மாற்றும் என்றோ தெரிவதில்லை. அதனாலேயே பல மாணவர்களது விளையாட்டு ஆர்வம் சிதைக்கப்படுகிறது.
ஆனால் பள்ளியிலேயே இதற்கான ஊக்குவிப்பு கிடைக்கும் போது, இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த பாடப்பிரிவுகளைத் துவக்குவதற்கு, சில பள்ளிகள் சொந்தமாக உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்) அமைத்து, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில், அருகில் உள்ள உடற்பயிற்சி கூடங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
தற்போது அறிமுகப்படுத்தும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடம் இருந்து வரும் ஆதரவைப் பொறுத்து, ஸ்போர்ட்ஸ் ஜேர்னலிசம் பாடப்பிரிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
Leave a Reply