சிறப்பு அந்தஸ்தை பெறும் இந்தியா

posted in: கல்வி | 0

மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தை(எம்.ஜி.ஐ.இ.பி) அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் என்று அறியப்படும் இதன் மூலமாக, இந்தியா, யுனெஸ்கோவின் முதல் வகை(கேட்டகரி-1) கல்வி நிறுவனத்தைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெறும். தற்போது மொத்தம் 11 யுனெஸ்கோ முதல் வகை கல்வி நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ளன.

அவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் முன்னேறிய நாடுகளிலும், மீதம் 2 கல்வி நிறுவனங்களில் எத்தியோபியாவிலும், வெனிசுலாவிலும் தலா 1 கல்வி நிறுவனமும் உள்ளன. இந்த மகாத்மா காந்தி கல்வி நிறுவனமானது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், அமைதி மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான கல்வியில் ஒரு உலக தலைவராக இந்தியா உருவாக உதவி புரியும்.

இந்த மகாத்மா காந்தி கல்வி நிறுவனமானது, அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கல்வியை வலுப்படுத்துவது மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டில், உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துவது ஆகியவற்றில் ஈடுபடும். மேலும் இந்த எம்.ஜி.ஐ.இ.பி., இந்தியா மற்றும் யுனெஸ்கோ இடையிலான செயல்பாட்டு ஒப்பந்தத்தின் மூலமாக நிர்வகிக்கப்படும்.

இக்கல்வி நிறுவனத்தின் படிப்புகளுக்கு அனுமதி வழங்குதல், பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்குதல் மற்றும் கொள்கை வழிகாட்டுதல் ஆகிய பணிகளை 12 பேர் அடங்கிய நிர்வாக வாரியம் மேற்கொள்ளும். இந்த கல்வி நிறுவனத்தை 7 ஆண்டுகளில் நிர்மாணித்து முடிப்பதற்கு ரூ.223.68 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *