ஜப்பானில் உச்ச கட்ட உஷார்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

புக்குஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் உள்ள, நான்கு உலைகளிலும், எரிபொருள் உருகியிருப்பதாக சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கில், 3ம் உலையில் யுரேனியத்தோடு புளுட்டோனியமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நில நடுக்கமும் அதைத் தொடர்ந் அணு உலைகளில் நடந்த விபத்தும், யுரேனியம் மற்றும் புளுட்டோனிய கம்பிகள் உருகியிருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பின. இந்நிலையில், நேற்று முன்தினம், 3ம் உலையின் வெளிப்புற மண்ணில், புளுட்டோனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட, அணு மின் நிலைய இயக்க நிறுவனம் “டெப்கோ’, கேடு விளைவிக்காத வகையில் மிகக் குறைந்த அளவிலேயே புளுட்டோனியம் கசிந்திருப்பதாக சமாதானம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று ஜப்பான் பார்லிமென்ட்டில் உரையாற்றிய பிரதமர் நவோட்டோ கான் கூறியதாவது: இந்த நில நடுக்கம், சுனாமி மற்றும் அணு உலை விபத்துக்கள் ஆகியவை, கடந்த சில பத்தாண்டுகளில் ஜப்பான் எதிர்பாராத மிகப் பெரும் சவால்களாக உள்ளன. அணு உலைகளில் சிக்கல், சரியாக கணிக்க முடியாதபடி தொடர்கிறது. இந்தப் பிரச்னையை “உச்ச கட்ட உஷார்’ நிலையில் ஜப்பான் அரசு எதிர்கொள்ளும். டாய் இச்சியின் ஆறு அணு உலைகளும் விரைவில் இழுத்து மூடப்படும். இவ்வாறு நவோட்டோ கான் தெரிவித்தார்.

கழிவறை பேப்பருக்குத் தட்டுப்பாடு: நில நடுக்கம் மற்றும் சுனாமியால், ஜப்பானில், தண்ணீர், உணவு, பேட்டரி மற்றும் கழிவறை பேப்பர் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகக் கிடக்கின்றன. அதிலும் சில கடைகளில், கழிவறைப் பேப்பர் ஸ்டாக் இல்லை என்றே போர்டுகள் மாட்டப்பட்டுள்ளன. அப்படியே சில கடைகளில் கிடைத்தாலும், நபர் ஒருவருக்கு ஒரு பண்டல் மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நில நடுக்கத்துக்குப் பின், பல பேப்பர் மில்கள் தங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியாமல் இருப்பதால் தான், இந்தத் தட்டுப்பாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *