டோக்யோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணு உலைகளில் சில வெப்பம் காரணமாக வெடிக்கும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இவற்றில் ஏதாவது ஒரு அணு உலை வெடித்தாலும், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்த போது ஏற்பட்டதைவிட பல மடங்கு அதிக சேதத்தை ஜப்பானும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால், மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
ஃபுகுஷிமா பகுதியில் உள்ள பெரிய அணு உலையில் வழக்கத்தை விட 1000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு வெளிப்பட ஆரம்பித்துள்ளது. டோக்யோவிலிருந்கு 170 கிமீ தொலைவில் உள்ளது இந்த அணுஉலை.
பூகம்பம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், இந்த அணு உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்குத் தேவையான தண்ணீர் ஏற்றப்படவில்லை என்றும், ஜெனரேட்டர்கள் மூலம் இதனைச் சரிசெய்ய முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த முயற்சியில் வெற்றிகிட்டாததால், அணுஉலையின் வெப்பம் அதிகரித்து, வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருந்த 3000-க்கும் அதிகமான மக்கள் அலறியடித்துக் கொண்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதனை ஜப்பானிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.
ஜப்பானின் கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மேலும் 3 அணு உலைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள மேலும் 6 அணு உலைகள் மூடப்பட்டன. அங்கெல்லாம் அணுஉலைகள் குளிர்ந்த நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று ஜப்பான் அறிவித்துள்ளது.
அதேநேரம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், விரைவில் ஃபுகுஷிமா அணுஉலையின் வெப்பத்தடுப்பான்கள் செயல்படத் துவங்கும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமை அறிவித்துள்ளது.
Leave a Reply