ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில்… நாற்காலி கிடைக்குமா விஜயகாந்த், சரத், விஜய்க்கு?!

posted in: அரசியல் | 0

சென்னை: காற்று அப்படியே திசைமாறுகிறது கோலிவுட்டில். கடந்த ஆண்டு வரை முதல்வர் கருணாநிதி மேடைகளில் அவரைப் புகழ்ந்து வந்த நடிகர்களில் சிலர் இப்போது அதிமுக மேடைகளில் ஜெயலலிதாவை புகழ்ந்து, வாக்குக் கேட்டு வரப் போகின்றனர்.

நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடிகர் விஜய்யும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் பிரச்சார மேடையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறாராம்.

ஒரு பக்கம் மதிமுக, இடதுசாரிகளுக்கான தொகுதிப் பங்கீடு இழுத்துக் கொண்டிருக்கிறது. கார்த்திக் தனியாகப் போய் ‘மானம் காத்துக் கொள்வதாக’ அறிவித்துள்ளார்.

ஆனாலும் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுப்பதிலும், முன்னெடுப்பதிலும் அதிமுக தீவிரமாகிவிட்டது. கட்சியின் தேர்தல் குழு தலைவரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசார திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு முடிந்த உடனேயே தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும். அனேகமாக அடுத்த வாரம் பிரசாரத்தை ஆரம்பிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முறை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் மட்டுமின்றி நடிகர் விஜய், நடிகர் ராமராஜன், நடிகர் சரவணன் மற்றும் வழக்கமாக வரும் குண்டுகல்யாணம் போன்ற நடிகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், விஜய் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் அவருக்கு மட்டுமே ஒரு நாற்காலி போடப்படும். அவரைத் தவிர மற்றவர்கள் நின்றபடிதான் பேச வேண்டும். அதுவும் அதிமுக வேட்பாளர் என்றால் பாதி குனிந்தபடி நிற்கவேண்டும், ஜெயலலிதா பேசி முடித்து மேடையை விட்டிறங்கும் வரை!

இந்த முறை விஜயகாந்த், சரத் மற்றும் விஜய்க்கு சம நாற்காலி கிடைக்குமா அல்லது ‘ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்’தானா… பார்க்கலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *