சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், போயஸ் தோட்டம் இல்லத்தில் இன்று கையெழுத்திடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளின் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 24ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினருடன், தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். “தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது’ என, தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் தெரிவித்தார். ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு விஜயகாந்த் சார்பில் பூங்கொத்தும் வழங்கப்பட்டது. தே.மு.தி.க.,விற்கு தொகுதி பங்கீடு எண்ணிக்கையை முடித்தவுடன் ம.தி.மு.க., – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., – தே.மு.தி.க., பேச்சுவார்த்தை நடந்த பின், தேய்பிறை ஆரம்பித்ததால், அக்கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.
இன்று அமாவாசை, நல்லநாள் என்பதால் அ.தி.மு.க., – தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவேறவுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று விஜயகாந்த் தனது மனைவியுடன் வருகிறார். தொகுதி எண்ணிக்கை தொடர்பான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கையெழுத்திடுவர் என, இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து, ம.தி.மு.க., – இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனும் தொகுதி பங்கீடு எண்ணிக்கை உறுதி செய்யப்படுகிறது என்றும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Leave a Reply