திருப்பூர் மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டு தான் ஆகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி (தனி), பல்லடம், தாராபுரம் (தனி), காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
வெள்ள கோவில், பொங்கலூர் தொகுதிகள் மறைந்து விட்டன. மடத்துக்குளம் தொகுதி புதிதாக உருவாகியுள்ளது. ஒரே தொகுதியாக இருந்த திருப்பூர், வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு: விவசாயம், பித்தளை, எவர்சில்வர் பாத்திர உற்பத்தி மற்றும் உலக பிரசித்தி பெற்ற பனியன் தொழிலை பிரதானமாக கொண்டது. அ.தி.மு.க., ஆட்சியில் நேதாஜி அப்பேரல் பார்க் அமைத்ததால், கிராமப்பகுதியினர் வேலைவாய்ப்பு பெற்றனர். ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றபட்டிருந்தாலும், குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மக்களுக்கு நன்கு பரிச்சயமான கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இத்தொகுதி, அ.தி.மு.க., கோட்டை என்பதாலும், இக்கூட்டணி பலமாக இருப்பதாலும், முழு சக்தியையும் திரட்டி தி.மு.க.,வினர் போராட வேண்டி இருக்கும்.
திருப்பூர் தெற்கு: சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் பனியன் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. மார்க்சிஸ்ட் வேட்பாளரும், காங்கிரஸ் வேட்பாளரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். விரைவு வழி மேம்பாலம் அமைப்பது, ரயில்வே மேம்பாலங்கள், நொய்யல் ஆற்றுப் பாலங்கள் அமைத்தது போன்றவை அரசின் சாதனைகள். கோவில் வழியில் பஸ் ஸ்டாண்ட் அமைத்தல், மாநகராட்சி குப்பையை எரிக்கும் உரத் தொழிற்சாலை, பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது போன்ற திட்டங்கள் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளன. சாயத்தொழில் பிரச்னையும் எதிர் விளைவை ஏற்படுத்தும். மின்வெட்டு பிரச்னை, பனியன் தொழில் பிரச்னை, தி.மு.க., கூட்டணிக்கு சரிவையும், மார்க்சிஸ்டுக்கு பலமாகவும் இருக்கும்.தாராபுரம்: அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி பாசன கால்வாய்கள் புனரமைப்பு, உப்பாறு அணையின் நீராதார மேம்பாடு ஆகியவை இன்றும் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளன.
வருவாய் கோட்டம் உருவானது மட்டுமே புதிய மாற்றமாக தோன்றுகிறது. வழக்கமாக, தாராபுரம் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இதுவரை தொடர்கிறது. தி.மு.க., சார்பில் ஜெயந்தியும், அவரை எதிர்த்து அ.தி.மு.க., வேட்பாளரும் போட்டியிடு கின்றனர்.
மடத்துக்குளம்: தி.மு.க., மாவட்டச் செயலர் சாமிநாதனும், அ.தி.மு.க., மாவட்டச் செயலர் சண்முகவேலுவும் நேருக்கு நேர் மோதுகின்றனர். எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தொகுதிக்கு அமைச்சர் கிடைப்பது உறுதி. விவசாயம், நூற்பாலைகள் தொழிலும், அமராவதி சர்க்கரை ஆலையும் உள்ளன. அமராவதி பாசன கால்வாய் மற்றும் புதிய ஆயக்கட்டு கால்வாய் புனரமைப்பு பணிகள், 50 ஆண்டுகளாக நடக்காதது வருத்தம். இரு கட்சிகளிலும் மாவட்டச் செயலர்கள் என்பதால், மோதல் வலுவாக இருக்கும். அமைச்சர் தரப்பில் பணம், “விளையாடும்’ என, எதிர்பார்க்கப் படுகிறது.
உடுமலை: பொள்ளாச்சி தொகுதியில் இருந்த பகுதிகள், உடுமலை தொகுதியில் இடம் பெற்று ள்ளன. தென்னை சாகுபடியில் முன்னிலை வகிக்கும் இத்தொகுதியில், நார் தொழிற்சாலைகள் அதிகம். தேங்காய்க்கு விலை நிர்ணயம், நேரடி கொள்முதல் ஆகியவை நீண்ட நாள் வாக்குறுதிகளாக உள்ளன.பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை, சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்கும் கோரிக்கை மற்றும் பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலப் பணி கிடப்பில் போட்டது ஆகியவற்றுக்கு பதில் கூறியாக வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.,) களம் இறங்குவதால், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் (கொ.மு.க.,) இளம்பரிதி, கடும் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக உள்ளது.
அவினாசி: தனி தொகுதியான இங்கு, அ.தி.மு.க.,வும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன. 40 ஆண்டாக சொல்லப்பட்டு வரும் அவினாசி – அத்திக்கடவு திட்டம், தொழிற்பேட்டை, கலைக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. கடந்த கால முடிவுகள், அ.தி.மு.க.,வுக்கும், கொ.மு.க., வருகை தி.மு.க., கூட்டணிக்கும் சாதகமாக உள்ளன. என்றாலும், பெண்கள் ஓட்டே வெற்றியை தீர்மானிக்கும்.
பல்லடம்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, செ.ம.வேலுச்சாமி, இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர், புதிதாக உதயமாகியுள்ள சூலூர் தொகுதிக்கு தாவியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்ததால், தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதியைத் தவிர, வேறெந்த திட்டங்களையும் குறிப்பிடும்படி, இவராமல் செய்து கொடுக்க முடியவில்லை. எனினும், மக்களிடம் செல்வாக்கைப் பெற்றவர்.அரசு கலைக் கல்லூரி அமைக்கப் படாதது, விசைத்தறி தொழிலை பாதுகாக்க நூல் கொள்முதல் விலை உயர்வு தடுக்கப்படாதது, கறிக்கோழி வளர்ப்புக்கு வங்கிக் கடன் வசதி இல்லாதது போன்றவை தொகுதியில் நீண்ட நாள் குறைபாடுகளாக உள்ளன.தே.மு.தி. க.,வுக்கு கைமாறும் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. எப்படி இருந்தாலும், பல்லடம் தொகுதியில் வெற்றிக்கனியை சுவைக்க, தி.மு.க., – அ.தி.மு.க., கூட்டணி கடுமையாக மல்லுக்கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
காங்கேயம்: “சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வாக காங்கிரசைச் சேர்ந்த விடியல் சேகர் உள்ளார். கூட்டணி பலத்தால், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் யாராக இருந்தாலும் சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடியும்.
Leave a Reply