கிருஷ்ணகிரி : “”மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் மூலம், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு, 50 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என, மத்திய அரசின் ஆணையை, அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க தலைவர் சண்முகப்பா, கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜனிடம் வழங்கினார்.
இதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியது: டோல்கேட்டில் அதிகளவில் சுங்கவரி வசூலிக்கப்பட்டதால், லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. இதை குறைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23ம் தேதி, மத்திய அரசு லாரி உரிமையாளர் சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், மூன்று கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள, 622 டோல்கேட்டில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருந்து, 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு, கி.மீ., ஒன்றுக்கு, 3 ரூபாய் 40 பைசா, என்ற கட்டணத்தை, 2 ரூபாய் 20 பைசாவாக குறைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு இடத்தில் லாரிகளை நிறுத்தி வைக்க, இடம் ஒதுக்கி தரப்படும் என, மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், டோல்கேட் அமைத்து பணம் வசூலிக்கின்றன. சாலை பணி அமைக்க செலவிடப்பட்ட தொகை வசூலான பின்பும் கூட, அவர்கள் டோல்கேட்டில் பணம் வசூலிக்கின்றனர்.
உதாரணமாக பூந்தமல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலை போட்டதற்கு, 650 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இச்சாலைகளில் உள்ள ஆறு டோல்கேட்டிலும் நாள் ஒன்றுக்கு, 50 லட்ச ரூபாய் பணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் மாதம், 15 கோடி ரூபாயும், ஆண்டுக்கு, 180 கோடி ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் மட்டும், 900 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. செலவிடப்பட்ட பணத்தை விட அதிக தொகை வசூலித்தும், தனியார் நிறுவனங்கள் டோல்கேட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க மறுத்து வருகிறது. கச்சா எண்ணெய் மதிப்பு, 140 டாலராக இருந்த போது, மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தவில்லை. தற்போது, கச்சா எண்ணெய் விலை, 110 டாலராக இருக்கும் போது டீசல் விலையை உயர்த்த எண்ணியுள்ளது, என்ன காரணம் என தெரியவில்லை. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழக அரசு பெட்ரோலுக்கு மட்டுமே வரிகுறைப்பு செய்துள்ளது லாரி உரிமையாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. பெட்ரோலுக்கு வரி குறைப்பு செய்தது போல் டீசலுக்கும் வரி குறைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகப்பா கூறினார்.
Leave a Reply