தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்ற ரூ. 99 லட்சம் பறிமுதல்

posted in: மற்றவை | 0

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 99 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் பறக்கும்படை அலுவலர் அருள் அரசு, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் தக்கலை அருகேயுள்ள புலியூர்குறிச்சி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். காரில் இருந்தவர்கள் தாங்கள் வங்கி ஊழியர்கள் என்றும், நாகர்கோவில் கிளையில் இருந்து ரூ. 99 லட்சத்தை இரும்புப் பெட்டியில் வைத்து குலசேகரம் கிளைக்கு கொண்டு செலவதாகவும் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அதற்கான ஆவணங்களைக் கேட்டபோது அவர்கள் தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு நடந்த விசாரணையில் காரில் இருந்த சந்திரசேகர், ஜோசப் ஆம்ஸ்ட்ராங் இருவரும் நாகர்கோவிலில் உள்ள வங்கியில் பணிபுரிகின்றனர் என்பது தெரியவந்தது. இரும்புப் பெட்டியைத் திறந்து எண்ணியபோது அவர்கள் கூறியவாறே ரூ. 99 லட்சம் பணம் இருந்தது.

இதையடுத்து தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களும், பாதுகாப்பும் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *