அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயண திட்டங்களை பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு இன்று அல்லது நாளை தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு வருகிற 15-ந்தேதி முதல் பிரசாரத்தை துவங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் சென்னையில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறார். சைதாப்பேட்டை, ஆலந்தூர் தொகுதிகளில் ஓட்டு சேகரிக்கிறார்.
பின்னர் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 11-ந்தேதி வரை ஆதரவு திரட்டுகிறார். முழுக்க முழுக்க வேனிலேயே பிரசாரம் செய்கிறார். இதற்காக அனைத்து வசதிகளுடன் பிரசார வேன் தயாராகி உள்ளது.குக்கிராமங்களுக்கு சென்று ஓட்டு சேகரிக்கிறார். முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
தினமும் பகல் 2 மணிக்கு பிரசாரத்தை துவங்கி இரவு 10 மணிக்கு முடிக்கிறார். கடைசியாக வடசென்னையில் பிரசாரம் செய்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார். மொத்தம் 28 நாட்கள் பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஜெயலலிதா பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரசார நாட்கள் குறைவாக இருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒன்றாக சுற்றுப்பயணம் செய்யும் நிகழ்ச்சிநிரல் இல்லை என கூறப்படுகிறது.
ஆனாலும் கடைசி நாளில் ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்களை ஒரே மேடையில் பேச வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply