திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக

posted in: அரசியல் | 0

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சி விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் திமுகவினர் சற்றே வருத்தமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் கடும் பிடிவாதம், முரண்டு ஆகியவற்றைத் தாண்டி தற்போது 63 தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கி ஓய்ந்துள்ளது திமுக. இதில் சில தொகுதிகள் திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளன. அதில் முக்கியமானது ராயபுரம்.

ராயபுரம் திமுகவினரின் மனதில் நிரந்தர இடம் பிடித்த ஒரு இடமாகும். இந்த பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் வைத்துதான் திமுக என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்தார் பேரறிஞர் அண்ணா. அதுவும் காங்கிரஸை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட இயக்கமான திமுக, தனது பிறப்பிடத்தை அதே காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது வருத்தம் தருவதாக திமுகவினர் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகிறது.

தற்போது ராயபுரம் தொகுதி அதிமுக வசம் உள்ளது. இங்கு அதிமுகவின் ஹெவிவெயிட் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் உறுப்பினராக உள்ளார். மீண்டும் ஜெயக்குமாரே இங்கு போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பெரிய ஆட்கள் யாரும் இல்லை. எனவேதான் இந்தத் தொகுதியை காங்கிரஸ் வசம் திமுக தள்ளி விட்டுள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

எப்படி இருப்பினும், திமுக உதயமான பகுதியை உள்ளடக்கிய ராயபுரம் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்ததால் திமுகவினர் அதிருப்தியுடன் உள்ளனர் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *