“வரும் ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் வளாகத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வைரவிழா ஆண்டு கல்லூரி தினவிழா நடந்தது. ஜமால் முகமது கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பல்கலை பிரதிநிதியாக செயல்பட்ட, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனாவுக்கு, கல்லூரி நிர்வாகக்குழுவின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதீன், பொருளாளர் கலீல் அகமது ஆகியோர் சிறந்த கல்வியாளர் விருது வழங்கி கவுரவித்தனர்.
விழாவில், துணைவேந்தர் மீனா பேசியதாவது : பாரதிதாசன் பல்கலை இணைவுப் பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக, பல்கலை தொழில் நிறுவன கூட்டு மையத்தின் ஏற்பாட்டில், விப்ரோ, டி.சி.எஸ்., நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து காக்னிசென்ட் நிறுவனம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். அதற்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில், தலைமைப்பண்பு, ஆளுமைத்திறன், தகவல் தொடர்பு திறன், குழு விவாதம் போன்ற திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் வளாகத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணினி அறிவியல் மட்டுமன்றி கலை, அறிவியல் துறை மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளிலும் வளாகத்தேர்வு நடத்த நாட்குறிப்பு கையேடு வழங்கப்படும் என்று அவர் பேசினார்.
பல்கலை அளவில் ரேங்க் பெற்ற 21 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், பல்வேறு கல்விசார் திறன்களுக்காக 227 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 25 ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த நான்கு கல்லூரி பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
Leave a Reply