திருவண்ணாமலை:””தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
திருவண்ணாமலையில் சந்தை மேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்தும், செங்கம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்தும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:தற்போது நடக்கும் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்காக மட்டும் நடக்கும் தேர்தல் அல்ல; தமிழக மக்களாகிய உங்களுக்கு, விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். அடிமைத்தனத்திலிருந்து தமிழக மக்களாகிய உங்களை விடுவிக்க நடக்கும் தேர்தல்.கடந்த ஐந்து ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களை வெகுவாக பாதித்துள்ள பிரச்னை, விலைவாசி உயர்வு. இதை கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? இல்லை.மாறாக விலைவாசி உயர வழி வகுத்தார், அரிசி கடத்தலை ஊக்குவித்தார், பதுக்கலுக்கு பக்க பலமாக இருந்தார், காஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் விலை உயர காரணமாக இருந்தார். கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் விலை ஒன்பது முறை உயர்த்தப்பட்டு, 15 ரூபாய் உயர்ந்துள்ளது.கடந்த காலங்களில், 15 ரூபாய்க்கு விற்ற கிலோ அரிசி, 42 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை, 35 ரூபாய்க்கும், 25க்கு விற்ற துவரம் பருப்பு, 90க்கும், 35க்கு விற்ற புளி, 110க்கும், 38க்கு விற்ற பூண்டு, 250க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில், 2,500 ரூபாய்க்கு விற்ற மணல் தற்போது, 13 ஆயிரம் ரூபாய்க்கும், 150க்கு விற்ற சிமென்ட் மூட்டை தற்போது, 280க்கும் 3க்கு விற்ற செங்கல் 6க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மின் வெட்டால் தொழில் உற்பத்தி, விவசாயம், ஜவுளி தொழில் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டன, சட்டம் ஒழுங்கு என்பது இல்லாமலே போய்விட்டது, தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, ரவுடி கும்பல், தமிழக மக்களை அடக்கி ஆள்கிறது. காவல்துறை கருணாநிதியின் குடும்பத்தின் ஏவல்துறையாக மாறிவிட்டது.தமிழகத்தின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி விட்டது. பாலாறு மற்றும் பென்னையாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அரசால் சுட்டு வீழ்த்துவதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கருணாநிதியின் ஆட்சியில் நீதிபதிகள், வக்கீல்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர்.சினிமா துறை, கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது. அனைத்து நிலங்களும் கருணாநிதியின் குடும்பத்தால் அபகரிக்கப்பட்டுவிட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டன. மொத்தத்தில், குரங்கு கையில் பூமாலை சிக்கியதுபோல கருணாநிதியின் குடும்பத்தின் கையில், தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், திருவண்ணாமலையில் ஆமைவேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவேன். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக புறவழிச்சாலை அமைப்பேன்.திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைப்பேன். கலசப்பாக்கத்தில், 30 படுக்கை கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பேன். அதே போன்று கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் தொகுதிகளின் பிரச்னைகளை நன்கு அறிவேன். அதன் பின், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்களை பட்டியலிட்டு பேசினார்.
Leave a Reply