சென்னை: கொளத்தூர் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பணப் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெற்றிநகர் சுந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில், வக்கீல் ஆர்.பாலசுப்ரமணியம் ஆஜரானார். “முதல் பெஞ்ச்’ உத்தரவில், “சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் மனுவில் கூறப்பட்டுள்ளன. அவர்களை வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கவில்லை. அவர்களை சேர்க்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களை பிரதிவாதியாக மனுதாரர் சேர்க்கலாம். விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என கூறியுள்ளது.
ஐகோர்ட்டில் சுந்தர் தாக்கல் செய்த மனு: கொளத்தூரில், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தி.மு.க.,வினர் பணம் கொடுத்துள்ளனர். 16 பேரை பறக்கும் படையினர் பிடித்தனர். உதவி கமிஷனர் சுப்பாராவ் அங்கு வந்து, பிடிபட்டவர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார். பணத்தையும் பறிமுதல் செய்யவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க.,வினர் மீது புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply