தி.மு.க.,வின் காப்பீட்டு திட்டம் கவலைக்கிடம்

posted in: மற்றவை | 0

தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார் மருத்துவமனைகள் விலகி உள்ளன.

அதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த சிரமப்படுவதால், ஆளும் கட்சிக்கு பாதகமாக, காப்பீட்டுத் திட்டம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக தேர்தலில், தி.மு.க., கூட்டணி, இலவச திட்டங்களை மையப்படுத்தி, பிரசாரத்தை மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளது. ஆளும் கட்சியினரின் பிரசார அஸ்திரங்களில் ஒன்றான, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்திட்டம் துவக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள, 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமின்றி, முக்கிய நகரங்கள், தாலுகாக்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளும் போட்டி போட்டு, திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டன. 2010 மே மாதம் வரை, தமிழகத்தில் 1,01,150 நோயாளிகளுக்கு, 179 கோடி ரூபாய் சிகிச்சைக்காக செலவிடப்பட்டது.

திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நாளடைவில், பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தின. அதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பலருக்கு, சிகிச்சைக்கான தொகைகளில், குறிப்பிட்ட சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டது. அதனால், தனியார் மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய தொகை போக, மீதி தொகையை, நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கத் துவங்கின. இது, மருத்துவமனைகளின் நிர்வாகத்துக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் மோதலை ஏற்படுத்தியது. இதனால் பல மருத்துவமனைகள், காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டன.

2010 ஆகஸ்ட் மாதத்தில், தமிழகம் முழுவதும், 1,152 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் பதிவு செய்து இணைத்திருந்தன. அக்டோபர் மாதத்தில், 125 தனியார் மருத்துவமனைகள் முதல் கட்டமாக, விலகிக் கொண்டன. தற்போது, மாதத்துக்கு சராசரியாக, 25 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இருந்து விலகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 875 தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் பல மருத்துவமனைகள், இத்திட்டத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ளன. இத்திட்டத்தில் இருந்து விலகிய தனியார் மருத்துவமனைகளின் விவரங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம், பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. திட்டத்தில் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகள், சிகிச்சைக்குப் பின், திட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை விலகியிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

திட்டத்தை நம்பி சிகிச்சை பெற்றவர்கள், பின் மருத்துவமனைக்கு பணம் செலுத்த முடியாமல், மிகுந்த சிரமத்தில் தள்ளப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும், இத்திட்டத்தில் ஆபரேஷன் மேற்கொள்ளும் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊக்கத் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது டாக்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகள் தொடர்வதால், தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், தி.மு.க.,வால் துவக்கப்பட்ட இத்திட்டம், ஆளும் கட்சிக்கு எதிராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *