சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்காக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு 11.30 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தின.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை ஏற்கனவே திமுகவிடம் தந்துள்ளன.
இந் நிலையில் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் திமுக இறங்கியது. ஆனால், அவர்கள் கேட்கும் தொகுதிகளில் பல பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கோரும் தொகுதிகளாக உள்ளதால் இடங்களை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய காங்கிரசுக்கான தொகுதிகளை திமுகவால் முடிவு செய்ய முடியவில்லை. அந்தக் கட்சியின் ஐவர் குழுவுடன் நேற்று திமுக தரப்பு இருமுறை பேசியும் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து இன்றும் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் சந்தித்துப் பேசவுள்ளன.
இந் நிலையில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் குறித்து நேற்றிரவு பாமக, விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. தங்களுடன் தகராறு செய்த காங்கிரஸை விட பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கே அவர்கள் கோரும் இடங்கள் முதலில் கிடைக்க வேண்டும் என்று திமுக கருதுவதாகத் தெரிகிறது.
இதனால் காங்கிரசுடன் பேச்சு நடக்கும் அதே வேளையில் இந்த இரு கட்சிகளையும் அழைத்து அவர்கள் கோரும் தொகுதிகளில் பெரும்பாலானவற்றை முன்னுரிமை அடிப்படையில் தந்துவிட திமுக முடிவு செய்துள்ளது. இதனால் இவர்களை நேற்றிரவே அழைத்துப் பேசியது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் அடங்கிய திமுக குழுவுடன், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் அடங்கிய பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமகவுக்கான பெரும்பாலான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.
இது இரு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் 3வது கட்ட பேச்சுவார்த்தையாகும். இரவு 9.20 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை, இரவு 11 மணிக்கு முடிவடைந்தது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மணி, திமுகவுடனான தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறும். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விரைவில் வெளிவரும்.
நாங்கள் கேட்ட தொகுதிகளில் பெரும்பாலானவை கிடைத்துள்ளன. இன்னும் ஒரு சில தொகுதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், ஒரு சில தொகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விட்டுக் கொடுத்து, பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி:
பாமகவை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர், திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ, மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் ஆகியோர் இரவு 11.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு
இன்னும் ஒரு சில தொகுதிகள்தான் இறுதி செய்ய வேண்டியுள்ளது. ஒரே தொகுதிகளை தோழமை கட்சிகளும் விரும்புவதால் நாளை மீண்டும் பேசி, 10 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
மணி, திருமாவின் பேட்டி மூலம் அவர்களது கட்சிகளுக்கு பெரும்பாலான தொகுதிகளை திமுக ஒதுக்கிவி்ட்டது உறுதியாகிறது. இதன்மூலம் வட மாவட்டங்களில் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கோரிய இடங்களையே கோரிய காங்கிரசுக்கு அவை கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.
Leave a Reply