தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர் : தி.மு.க.,வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் “ஷாக்’

posted in: அரசியல் | 0

தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.


சுவர் விளம்பரம் முதல், பூத் கமிட்டி பணப்பட்டுவாடா வரை, துணை முதல்வரே நேரடியாக களமிறங்கியுள்ளதால், எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., – ம.தி.மு.க., – இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., – புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைத்துள்ளன. தி.மு.க.,வில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, மாவட்டம் தோறும், வார்டு மற்றும் கிளைகளில் தி.மு.க., – அ.தி.மு.க., – காங்., – தே.மு.தி.க., – பா.ம.க., – வி.சி., – இ.ஜ.க., வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் குறித்த விவரங்கள், தி.மு.க., தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பூத் கமிட்டிகளுக்கு தலா, 3,000 ரூபாய் வரை, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம், கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகிறது. அந்த தொகையில், சுவர் விளம்பரம் ரிசர்வ் செய்தல் மற்றும் எழுதுதல் வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றிய செயலர்களின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் பணி நிலவரம் குறித்து பேசி வருகிறார்.

தொகுதியிலுள்ள பூத் கமிட்டி எண்ணிக்கை, ஒன்றிய மற்றும் நகர பகுதி பூத் எண்ணிக்கை விவரமும், பூத் கமிட்டிக்கு தொகை பட்டுவாடா மற்றும் சுவர் விளம்பர பணி பற்றி கேட்டு வருகிறார். அதனால் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த, எதிர்க்கட்சியினர் பெரிதும் கலக்கத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *